பிளாஷ்பேக் : நடனத்தில் பத்மினியை வென்ற எம்ஜிஆர்
27 மார், 2024 – 11:46 IST
பொதுவாக மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு நடனம் அந்த அளவிற்கு வராது என்பார்கள். அவரும் தன் படங்களில் எளிமையான நடன அசைவுகளையே பயன்படுத்துவார். ஆனால் சில படங்களில் நடனத்தில் அசத்தி இருப்பார். அதில் முக்கியமானது ‘மன்னாதி மன்னன்’ படத்தில் அவர் ஆடிய நடனம். இந்த படத்தில் அவர் படத்தின் நாயகி பத்மினியையே நடனத்தில் வென்று விடுவார்.
கதைப்படி நாட்டிய கலைஞரான பத்மினிக்கு அந்த கலையில் தான்தான் பெரிய ஜீனியஸ் என்ற நினைப்பு இருக்கும். நடன நிகழ்ச்சி ஒன்றில் பத்மினி ஆடுவார். அந்த நேரத்தில் அங்கு வரும் எம்ஜிஆர் அவரை விட சிறப்பாக ஆடி அனைவரையும் ஆச்சர்யப்படுத்துவார். பாடலின் முடிவில் பத்மினி களைப்படைந்து கீழே விழுந்து விட எம்.ஜி.ஆர் வென்று விடுவார்.
கதைப்படிதான் எம்ஜிஆர் ஜெயித்தார் என்றாலும் அன்றைக்கு நாட்டியத்தில் சிறந்து விளங்கிய பத்மினியுடன் எம்.ஜி.ஆர் போட்டி போட்டு நடனமாடியது ஆச்சர்யத்துடன் பார்க்கப்பட்டது.
நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸ் தயாரித்த ‘மன்னாதி மன்னன்’ படம் 1960ல் வெளிவந்தது. இதில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி பத்மினி. அஞ்சலிதேவி, எம்.ஜி.சக்ரபாணி, பி.எஸ்.வீரப்பா, ஜி.சகுந்தலா, லட்சுமி பிரபா, குலதெய்வம் வி.ஆர்.ராஜகோபால், திருப்பதிசாமி, லட்சுமி ராஜ்யம், அப்பா வெங்கடாஜலம், ஆழ்வார் குப்புசாமி, என்.எஸ்.நாராயணபிள்ளை, ஆர்.எம்.சேதுபதி, சிவானந்தம், ஆகியோரும் நடித்திருந்தனர். கதை, வசனம் கண்ணதாசன் எழுதியிருந்தார். எம்.நடேசன் இயக்கி இருந்தார். விசுவநாதன்-&ராமமூர்த்தி இசை அமைத்திருந்தனர்.
“அச்சம் என்பது மடமையடா! அஞ்சாமை திராவிடர் உடமையடா” உள்பட 12 பாடல்கள் இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்தன.
+ There are no comments
Add yours