ராஜேந்திரகுமார், நுதன் நடித்து இந்தியில் வெளியான படம், ‘சாஜன் பினா சுஹாகன்’. ஸ்வான்குமார் தக் இயக்கிய இந்தப் படத்தை தமிழில் ‘மங்கள நாயகி’ என்ற பெயரில் ரீமேக் செய்தார்கள், இரட்டை இயக்குநர்களான கிருஷ்ணன்–பஞ்சு. ஸ்ரீகாந்த், கே.ஆர்.விஜயா, சரத்பாபு, சிவச்சந்திரன், மனோரமா, நிஷா. ஸ்ரீகீதா உட்பட பலர் நடித்தனர்.
வி.குமார் இசையமைக்க, வாலி பாடல்களை எழுதினார். கே.ஜே.யேசுதாஸ் பாடிய ‘கண்களால் நான் வரைந்தேன்’,எஸ்.பி.சைலஜா, பி.சுசீலா இணைந்துபாடிய ‘ஓ மம்மா’, டி.எம்.சவுந்தர்ராஜன், எஸ்.பி.சைலஜா பாடிய ‘மாப்பிள்ளை மாப்பிள்ளை மண்ணாங்கட்டி தோப்பில’, சுசிலா பாடிய, ‘வடிவேலனே சிவபாலனே’ ஆகிய பாடல்கள் கவனிக்கப்பட்டன.
நாயகிக்கும் மருத்துவம் படிக்கும் நாயகனுக்கும் காதல். படிப்பு முடிந்ததும் திருமணம் என்ற கனவில் இருக்கிறார் நாயகி. ஆனால், நாயகன் மேல்படிப்புக்காக வெளிநாடு செல்கிறான். இதற்கிடையே மரணப்படுக்கையில் இருக்கும் நாயகியின் தந்தை, அவர் நண்பர் மகனை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என சத்தியம் வாங்கிவிட்டு இறந்துபோகிறார். வேறு வழியின்றி, அப்பாவின் ஆசையை நிறைவேற்ற அவரை திருமணம் செய்துகொள்கிறார். இதற்கிடையே நாயகியின் காதல் விவகாரத்தைத் தெரிந்து வைத்திருக்கிற ஒருவன், பிளாக்மெயில் செய்கிறான். ஒரு கட்டத்தில் அவன் கொல்லப்பட, பிறகு என்ன நடக்கிறது என்று கதை போகும்.
நடிகை ஷோபனா, தனது 10 வயதில் குழந்தை நட்சத்திரமாக இந்தப் படத்தில்தான் அறிமுகமானார். 1980-ம் ஆண்டு இதே தேதியில்தான் இந்தப் படம் வெளியானது.