சென்னை: “நமது தென்னிந்தியாவில் நிறைய பேர் சவுதி, குவைத் என பல இடங்களுக்கு சென்று கஷ்டமும் பட்டுள்ளனர். சாதனைகள் புரிந்து பணமும் சம்பாதித்துள்ளனர். இப்படியான அனைவருக்குமே இந்தப் படம் கனெக்ட்டடாக இருக்கும்” என ‘ஆடு ஜீவிதம்’ படத்தின் இயக்குநர் ப்ளஸ்ஸி தெரிவித்துள்ளார்.
சென்னையில் பிருத்விராஜ் நடித்துள்ள ‘ஆடு ஜீவிதம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் பிளஸ்ஸி, “இந்த படத்தைப் பற்றி நான் பேசுவதை விட இந்த படம் தான் பேச வேண்டும் என்று நினைப்பேன். கடந்த 20, 25 வருடத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் போல ஒரு மனிதரை நான் பார்த்ததில்லை.
ஏனெனில், இந்த கதை ஆரம்பிக்கும் பொழுது என்னிடம் பெரிய தயாரிப்பு நிறுவனமோ மற்ற எதுவுமே இல்லை. நஜீப் என்ற கதாபாத்திரத்தின் ஆழம் மட்டுமே இருந்தது. அதை புரிந்து கொண்டு ரஹ்மான் இந்த படத்துக்குள் வந்தார். 2017 ஆம் வருடத்தில் இருந்து இந்த படத்துக்காக ட்ராவல் செய்திருக்கிறார். அவருடைய அர்பணிப்புக்கு நன்றி.
பிருத்விராஜ் இப்பொழுது என்னுடைய தம்பி போல. அவர் சொன்னது போல இந்த 16 வருடத்தில் அவருக்கு திருமணம், குழந்தை, தயாரிப்பாளர் என பல விஷயங்கள் பார்த்துவிட்டார். ஆனாலும் இந்த படம் தொடங்கிய வேளையில் இருந்தது போலவே இப்போது வரை அதே ஈடுபாட்டோடு அவர் இருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் சுனில் நான் நினைத்ததற்கும் மேலாக படத்தை திரையில் கொண்டு வந்துள்ளார். ஜிம்மியும் சிறப்பாக நடித்துள்ளார். நமது தென்னிந்தியாவில் நிறைய பேர் சவுதி, குவைத் என பல இடங்களுக்கு சென்று கஷ்டப் பட்டுள்ளனர். சாதனைகள் புரிந்து பணமும் சம்பாதித்துள்ளனர். இப்படியான அனைவருக்குமே இந்த படம் கனெக்ட்டடாக இருக்கும். நம் வாழ்வில் எவ்வளவு கஷ்டமும் மன அழுத்தமும் இருந்தாலும் உள்ளே ஏதோ ஒரு நம்பிக்கை இருந்தால் நிச்சயம் வெற்றியை பார்க்க முடியும் என்பது தான் இந்த கதை. படம் பார்த்துவிட்டு ஆதரவு கொடுங்கள்” என்றார்.