மும்பை: “‘நீங்கள் நடிகர் தானே’ என சந்தேகத்துடன் கேட்பார்கள். மக்கள் என் பெயரை அறிந்திருக்க வேண்டும் என்று நான் எப்போதும் ஆசைப்பட்டது உண்டு. ஆனால், இன்று அனைவரும் என் பெயரை அறிந்திருக்கிறார்கள்” என பாலிவுட் நடிகர் பங்கஜ் திரிபாதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “இன்று எல்லோரும் என்னை என் படங்களின் கதாபாத்திர பெயர்கள் மூலம் அழைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், ஆரம்பத்தில், ஆறு, ஏழு வருடங்களுக்கு முன்பு, என்னுடைய பெயர் கூட யாருக்கும் தெரிந்திருக்கவில்லை என்பது எனக்கு வருத்தமாக இருந்தது.
‘நீங்கள் நடிகர் தானே’ என சந்தேகத்துடன் கேட்பார்கள். மக்கள் என்னுடைய பெயரை அறிந்திருக்க வேண்டும் என்று நான் எப்போதும் ஆசைப்பட்டது உண்டு. இன்று அனைவருக்கும் என் பெயர் தெரிந்திருக்கிறது. அவர்கள் நான் நடித்த கதாபாத்திரங்களை மிகவும் நேசிக்கிறார்கள். அதனால் என்னை கதாபாத்திர பெயர்களாலே அவர்கள் அழைப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
எனக்கு ஒரு ரசிகர் இருக்கிறார். அவர் ஆண்டு தோறும் என்னுடைய பிறந்த நாள் அன்று புதிய மரங்களை நடக்கூடியவர். நான் டெல்லியில் ‘Fukrey 3’ பட ஷூட்டிங்கில் இருக்கும்போது தான் எவ்வளவு பெரிய ரசிகர் என்பதை 2, 3 மணி நேரம் விவரித்தார்.
எட்டு வயது குழந்தை முதல் மூத்த குடிமகன்கள் வரை எல்லா வயதினரும் எனக்கு ஒரு ரசிகர்களாக இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. என்னுடைய பேச்சை கேட்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர். அவர்கள் யூடியூப்பில் என்னுடைய நேர்காணல்களை பார்ப்பதாக சொல்கிறார்கள். மிகவும் எமோஷனலாக உணர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.