‘அபூர்வ சிங்கீதம்’ மூலம் சிங்கீதம் சீனிவாசராவுக்கு காணிக்கை செலுத்திய கமல்
20 மார், 2024 – 11:01 IST
தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய ஜாம்பவான் இயக்குனராக வலம் வந்தவர் இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ். தமிழில் 1974லிலேயே திக்கற்ற பார்வதி என்கிற படத்தை இயக்கிய இவர், 1981ல் கமல் நடித்த ராஜபார்வை படத்தை இயக்கியதன் மூலமாக மீண்டும் தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்தார். தொடர்ந்து கமலை வைத்து அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும், காதலா காதலா, மும்பை எக்ஸ்பிரஸ் என கமர்சியல் கலந்த பொழுதுபோக்கு படங்களாக கொடுத்தார்.
அபூர்வ சகோதரர்களில் மூன்று வேடங்களிலும், மைக்கேல் மதன காமராஜன் படத்தில் நான்கு வேடங்களிலும் கமல்ஹாசனை வித்தியாசமான தோற்றங்களில் காட்டி கமல் ரசிகர்களிடம் ஒரு தனி இடத்தை பிடித்தவர் இவர். இன்றும் இவரது அபூர்வ சகோதரர்கள் படம் குறித்த வியப்பு ரசிகர்களிடம் நீங்கவில்லை. தமிழில் கமலை வைத்து கடைசியாக மும்பை எக்ஸ்பிரஸ் என்கிற படத்தை இயக்கிய இவர் அதன் பிறகு வயோதிகம் காரணமாக படங்கள் இயக்குவதை குறைத்துக் கொண்டார்.
தற்போது 92 வயதாகும் இவருக்கு காணிக்கை செலுத்தும் விதமாக கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம் அலுவலகத்தில் அபூர்வ சங்கீதம் என்கிற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். இதில் இயக்குனர் மணிரத்னம், ஒய்.ஜி மகேந்திரன், வைரமுத்து, சுஹாசினி, சித்தார்த், அனுஹாசன், ராஜீவ் மேனன், நடிகர் சித்தார், ராஜேஷ் எம் செல்வா, தேவிஸ்ரீ பிரசாத், அன்பறிவு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் கமலின் அலுவலகத்தில் உள்ள திரையரங்கில் சிங்கீதம் சீனிவாசராவின் படங்களும் திரையிடப்பட்டு அதன் பிறகு அது குறித்த கருத்தரங்கமும் நடைபெற்றது.
+ There are no comments
Add yours