விஜய் டிவியில் குக்கு வித் கோமாளி சீசன் 5க்கான வேலைகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. இந்த சீசன் வரும் மே மாதம் முதல் வாரத்திலிருந்து ஒளிபரப்பாகலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த நான்காண்டுகளாக இந்த நிகழ்ச்சியைத் தயாரித்து வந்த மீடியா மேஷன், தயாரிப்புப் பொறுப்பிலிருந்து வெளியேறியது மற்றும் நடுவர்களில் ஒருவராக இருந்த வெங்கடேஷ் பட்டின் விலகல் ஆகியவை காரணமாக இந்த சீசன் எப்படியிருக்குமோ என்கிற ஒரு எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியிலிருந்த சூழலில், முந்தைய சீசன்களைக் காட்டிலும் பிரமாண்டமாக இந்த சீசன் இருக்க வேண்டுமென சேனலும் விரும்புகிறதாம். எனவே முதல் படியாக வெங்கடேஷ் பட்டுக்குப் பதிலாக பிரபல சமையல் கலைஞர் மற்றும் நடிகராக இருக்கும் மாதம்பட்டி ரங்கராஜ் களமிறக்கபட்டார். ரக்கராஜும் செஃப் தாமுவும் அறிமுகமான புரொமோ இரு தினங்களுக்கு முன் வெளியிடப் பட்டநிலையில், நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் சில போட்டியாளர்களது பெயர்களை நாமும் எக்ஸ்க்ளுசிவாக வெளியிட்டிருந்தோம்.
அடுத்த சில தினங்களில் ‘குக்’குகளின் முழுப் பட்டியல் இறுதி செய்யப்பட்டுவிடுமெனத் தெரிகிறது.
நிகழ்ச்சியில் கோமாளிகளாக முந்தைய சீசன்களில் வந்த பழைய ஆட்களே வரவிருப்பதாகச் செய்திகள் வெளியானதையும் நம் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம். அதேநேரம் பாலா, ஷிவாங்கி ஆகிய இருவரும் இந்த சீசனுக்கு வர வாய்ப்பில்லை என்கிறார்கள்.
புகழ், குரோஷி உள்ளிட்ட சிலர் இடம்பிடித்திருக்கும் கோமாளிகளின் பட்டியலில் தற்போது இரண்டு புது முகங்களும் இணைந்திருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒருவர் நடிகை ஷப்னம். சன் டிவியில் ஒளிபரப்பான ‘தெய்வமகள்’, விஜய் டிவியின் ‘ராஜா ராணி’ உள்ளிட்ட சீரியல்கள் மூலம் நல்ல கவனம் பெற்றவர். சீரியல்களில் ஹுயுமர் கேரக்டர் என்றால் இவரை டிக் செய்வார்கள். தற்போது ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் ‘மாரி’ தொடரில் நடித்து வருகிறார். கடந்த பிக் பாஸ் சீசனிலேயே இவருக்கும் வாய்ப்பு வந்ததாம். ஆனால் கடைசி நேரத்தில் தவிர்க்க முடியாத சில காரணங்களால் அப்போது செல்லவில்லை. தற்போது குக்கு வித் கோமாளியில் கோமாளியாகக் கமிட் ஆகியிருக்கிறார்.
இவருடன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இன்னொரு சீரியலின் கதாநாயகியும் கோமாளியாகச் செல்ல இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர் ‘செல்லம்மா’ தொடரின் ஹீரோயினாக இருக்கக் கூடுமென்கிறார்கள்.
+ There are no comments
Add yours