மும்பை: மனோஜ் பாஜ்பாய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘ஜோரம்’ படத்தை இயக்கிய தேவஷிஷ் மகிஜா, தான் இயக்கிய எந்த படத்தின் மூலமும் தனக்கு பணம் கிடைத்ததில்லை என்றும் தற்போது தான் கடனாளியாகி விட்டதாகவும் வேதனையோடு தெரிவித்துள்ளார்.
கடந்த 2023ஆம் ஆண்டு தேவஷிஷ் மகிஜா இயக்கத்தில் மனோஜ் பாஜ்பாய் நடித்த படம் ‘ஜோரம்’. மலைவாழ் மக்கள் படும் இன்னல்களை மிக இயல்பாக பேசிய இப்படம் விமர்சன ரீதியாக பலராலும் பாராட்டப்பட்டது. மேலும் சிறந்த படம் மற்றும் சிறந்த கதைக்கான ஃப்லிம்பேர் விருதுகளையும் இப்படம் பெற்றது. இதுதவிர பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களிலும் இப்படம் திரையிடப்பட்டு பல விருதுகளை வென்றது.
இந்த நிலையில், ’ஜோரம்’ உள்ளிட்ட தான் இயக்கிய எந்த படத்தின் மூலமும் தனக்கு பணம் எதுவும் கிடைத்ததில்லை என்று இயக்குநர் தேவஷிஷ் மகிஜா தெரிவித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், “என்னுடைய எந்த படத்தின் மூலமும் எனக்கு பணம் கிடைத்ததில்லை. நான் வீட்டு வாடகை கொடுக்கவே சிரமப்படுகிறேன். காரணம், ‘ஜோரம்’ படம் மூலம் போட்ட பணம் எதுவும் திரும்ப கிடைக்கவில்லை.
நான் கடனாளியாகிவிட்டேன். கடந்த ஐந்து மாதங்களாக வீட்டு வாடகை செலுத்தவில்லை. என்னை வீட்டை விட்டு வெளியேற்றிவிட வேண்டாம் என்று உரிமையாளரிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறேன். கலைக்கு முக்கியத்துவம் கொடுக்க விரும்பினால் அதற்கு நாம் கொடுக்க வேண்டிய விலை இதுதான்.
என்னிடம் 20 கதைகள் இருக்கின்றன. ஆனால் அவற்றில் முதலீடு செய்ய எந்த தயாரிப்பாளரும் தயாராக இல்லை. கலைக்கும் வணிகத்துக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்தும் படங்களை எடுப்பது குறித்து மிகவும் தாமதாகவே உணர்ந்து கொண்டேன். இந்த கட்டத்தில் என்னால் ஒரு சைக்கிள் கூட வாங்க முடியாது” என்று தேவஷிஷ் தெரிவித்துள்ளார்.