Premalu Review: சாக்லேட் பாய் vs சாக்லேட் கேர்ள் – பிரேமிக்க வைக்கிறதா 2கே கிட்ஸின் லவ் ஸ்டோரி?

Estimated read time 2 min read

மலையாள சினிமாவின் சமீபத்திய ஹிட் சீசனில் `பிரமயுகம்’, `மஞ்சும்மல் பாய்ஸ்’ போன்றே ஒரு முக்கியமான படைப்பு `பிரேமலு’. தெலுங்கு டப்பிங்கைத் தொடர்ந்து தற்போது தமிழிலும் வெளியாகியிருக்கிறது.

சேலத்தில் பொறியியல் படிப்பை முடித்த கேரளாவைச் சேர்ந்த சச்சின் (நஸ்லன்), இங்கிலாந்தில் வேலை செய்ய விசாவிற்கு விண்ணப்பிக்கிறார். அது நிராகரிக்கப்படவே, அந்த வருத்தத்தாலும் பெற்றோரின் தொல்லை தாங்காமலும், ‘கேட்’ நுழைவுத் தேர்விற்குத் தயாராக தன் பள்ளி நண்பன் அமல் டேவிஸோடு (சங்கீத் பிரதாப்) சேர்ந்து ஹைதராபாத்தில் உள்ள பயிற்சி மையத்தில் சேர்கிறார்.

மறுபுறம், கேரளாவைச் சேர்ந்த ரீனு (மமிதா பைஜு), ஹைதராபாத்தில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணியில் சேர்கிறார். எதிர்பாராத விதமாக இருவரும் ஒரு திருமணத்தில் முட்டலும், மோதலுமாகச் சந்தித்துக்கொண்டு நண்பர்களாகிறார்கள். ரீனுவின் மேல் சச்சினுக்குக் காதல் வர, அதற்கு ரீனுவின் அலுவலக நண்பரான ஆதி (ஷ்யாம் மோகன்) இடைஞ்சலாக இருக்கிறார்.

Premalu

இறுதியில், ஆதியின் தடைகளை சச்சின் உடைத்தானா, ரீனுவிற்கு சச்சின் மேல் காதல் வந்ததா, சச்சினின் இங்கிலாந்து திட்டம் என்ன ஆனது போன்ற கேள்விகளுக்கான பதிலை ஒரு ரகளையான யூத் ஃபுல் படமாகச் சொல்லியிருக்கிறது இயக்குநர் கிரீஷ் ஏ.டியின் ‘பிரேமலு’ என்ற மலையாளத் திரைப்படம்.

கண்டதும் காதல், காதலுக்காக நண்பனைத் தொந்தரவு செய்வது, தன் பொருளாதார நிலையை எண்ணி எழும் தாழ்வுமனப்பான்மை என ‘வழக்கமான காதல் படங்களின்’ இளைஞனாக வந்தாலும், வசனங்களிலும் உடல்மொழியிலும் சின்ன சின்ன புதுமைகளைப் புகுத்தி, முடிந்தளவிற்கு ஒரு ‘ஃப்ரெஷ்ஷான’ கதாபாத்திரமாக உருமாறி, நம் மனதைக் கவர்கிறார் நஸ்லன். ஓவர் ஆக்டிங் செய்யப் பல தருணங்கள் இருந்தாலும், அவற்றைக் கச்சிதமாகக் கையாண்டு, நேர்த்தியான நடிப்பை வழங்கியிருக்கிறார். அவரின் காமெடி டைமிங்கும் அதற்கேற்ற உடல்மொழியும் கச்சிதம்.

படம் முழுவதும் அநாயாசமான உடல்மொழி, துள்ளலான பேச்சு எனச் சேட்டைகளும், ரகளைகளுமாக ரசிக்க வைத்த மமிதா பைஜு, இறுதிப்பகுதியில் தன் பக்குவமான நடிப்பால் அக்கதாபாத்திரத்திற்கு ஒரு முழுமையைக் கொண்டுவந்து ‘சபாஷ்’ வாங்குகிறார். எரிச்சலையும் காமெடியையும் ஒருசேரக் கடத்தும் ஆதி கதாபாத்திரத்திற்கு, ஷ்யாம் மோகன் பக்காவான தேர்வு. அக்கதாபாத்திரத்திற்குத் தேவையான ஓவர் டோஸ் நடிப்பை, ரசிக்கும்படி மடைமாற்றி இருக்கிறார். முக்கியமாக, முழு பூசனிக்காயைச் சோற்றில் மறைப்பது போல், வெட்கத்தை மறைத்து கோபத்தைக் கொண்டு வர அவர் முயலும் இடத்தில் பிரதான கதாபாத்திரங்களுக்குச் சவால் விடுகிறார்.

Premalu

நஸ்லனின் நண்பராக சங்கீத் பிரதாப், தன் டைமிங் காமெடிகளால் படம் முழுவதும் கலகலப்பிற்கு உத்தரவாதம் தருகிறார். ஒரு சில காட்சிகளில் தன் நடிப்பால், அழுத்தமான கதாபாத்திரமாகவும் மனதில் பதிகிறார். அகிலா பார்கவன், அல்தாஃப் சலீம், ஷமீர் கான் ஆகியோர் நடிப்பில் குறையேதுமில்லை.

அஜ்மல் சாபுவின் ஒளிப்பதிவு, ஒரு கலர் ஃபுல்லான ரொமான்டிக் காமெடிக்கான டோனைத் துறுத்தலின்றி திரையில் கொண்டு வந்திருக்கிறது. ஹைதராபாத்தின் அழகைக் காட்டும் காட்சிகளிலும், டிராவல் சீக்வன்ஸ்களிலும் கவனிக்க வைக்கிறார். அகாஷ் ஜோசப் வர்கீஸின் படத்தொகுப்பு ஒரு துள்ளலான மோடை செட் செய்து, படத்தின் நிதானத்திற்குத் தேவையான பங்களிப்பைச் செய்திருக்கிறது. 

விஷ்ணு விஜய்யின் இசையில்இசையில், கே.ஜி.மார்கோஸ் குரலில் ‘தெலுங்கானா பொம்மலு’ பாடல் படத்தின் ‘வைப்’ மெட்டீரியல். ஏனைய பாடல்கள் படத்தோடு வந்துப் போகின்றன. தன் பின்னணி இசையால், கொண்டாட்டம், குதூகலத்தோடு, உணர்வுகளையும் கடத்தியிருக்கிறார் விஷ்ணு விஜய். 

எதிர்காலம் குறித்த பக்காவான திட்டமிடலுடன், தன்னைவிட வயதில் மூத்த, ‘வெல் செட்டில்ட்’ ஆன ஆணையே திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு ஹைதராபாத்திற்குள் நுழையும் இளம் பெண்ணுக்கும், வாழ்க்கை குறித்த எந்தவித உறுதியான திட்டம், பாதுகாப்பான வேலையும் இல்லாமல், எண்ணம்போல் வாழும் இளைஞனுக்கும் இடையிலான மோதல், காதல், ஆடல், பாடலை ரொமான்டிக் காமெடியாக சொல்லியிருக்கிறது இயக்குநர் கிரீஷ் ஏ.டி மற்றும் கிரண் ஜோஷே அடங்கிய எழுத்துக் கூட்டணி. 

Premalu

எதிரெதிர் நாயகன் – நாயகி, வன்தொடரும் நாயகன், காதலுக்காக உதவும் நண்பன், இடையில் வரும் காதலியின் நண்பர், நாயகனின் காதலை உணரும் நாயகி எனப் பழகிப்போன கதையையும், அதன் கதாபாத்திரங்களையும் எடுத்துக்கொண்டு, கலகலப்பும் கலர் ஃபுல்லும் ஆன புது ட்ரீட்மென்ட்டில் படத்தைக் கொண்டு சொல்கிறது திரைக்கதை. ஒவ்வொரு காட்சியிலும் வரிசையான காமெடிகள், புதிய எலிமென்ட்கள் என மொத்தத் திரைக்கதையின் ஓட்டமும், தொய்வில்லாதபடி ரசிக்க வைக்கிறது. 

நண்பர்கள் செய்யும் சேட்டைகளோடு, அவர்களுக்குள்ளாகவே மற்றவர்களைக் கலாய்க்கும் இடங்களும் ‘அடிபொழி’ சிரிப்பு. அதிலும் க்ளைமாக்ஸுக்கு முன்னர் நாயகனும் அவரின் நண்பரும் இணைந்து ஷ்யாம் மோகன் பாத்திரத்தைக் கலாய்க்கும் இடம் ரகளையான டப்பாசு! இந்த காமெடிகளுக்கு இடையே பிரதான கதாபாத்திரங்களும் அழுத்தமாகவே (வழக்கமான குணாதிசயங்களுடன்) எழுதப்பட்டுள்ளன. ஹைதராபாத் நகரத்தை ஒரு கதாபாத்திரமாக மாற்றிய விதமும், வன்தொடர்தலுக்கு எதிரான வசனங்களும் கவனிக்க வைக்கின்றன. சின்ன சின்ன துணை கதாபாத்திரங்களின் பங்கு, தமிழ் வசனங்களையும் பாடல்களையும் பயன்படுத்திய விதம் ஆகியவை ரசிக்க வைக்கின்றன. 

Premalu

க்ளீச்சேவான சில காதல் காட்சிகளிலும் நாடகத்தனமான க்ளைமாக்ஸ் காட்சித் தொகுப்பிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். சிபிஎஸ்இ vs ஸ்டேட் போர்ட், பெஸ்டி காமெடிகள் போன்றவற்றைத் தவிர்த்திருக்கலாம். நாயகியின் மனமாற்றத்துக்கு வலுவான காரணம் இல்லை என்பதும் மைனஸ். யூகிக்கும்படியான க்ளைமாக்ஸ் காட்சதான் என்றாலும், கரியர் – காதல் உரையாடலைப் பொறுப்பாகவே அணுகியிருக்கிறது படம்.

படம் முழுவதும் பல ‘வழக்கமான’, ‘பழக்கமான’வைகள் நிறைந்திருந்தாலும், கலர் ஃபுல்லான 2கே கிட்ஸின் காதலைக் கொண்டாட்டமாகவும், ஆட்டம் பாட்டமுமாகச் சொல்லி நம்மை பிரேமிக்க வைக்கிறது இந்த ‘பிரேமலு’.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours