`நீயா நானா’ கோபிநாத் இனி வேறொரு அவதாரம் எடுக்கப்போகிறார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
‘நீயா நானா’ விஜய் டிவியின் பெருமை பேசும் ஒரு நிகழ்ச்சி என்றால், அந்தப் பெருமையில் கோபிநாத்துக்கும் பெரும்பங்கு உண்டு. சின்னத்திரை ஏரியாவில் கால் நூற்றாண்டு கால அனுபவம் கடந்துவிட்ட கோபிநாத் ஒரு வெற்றிகரமான நிகழ்ச்சித் தொகுப்பாளர் என்பதைத் தாண்டி தற்போது பிரபலமான பேட்டி எடுப்பவராகவும் அறியப்படுகிறார்.
மாநிலத்தின் முதலமைச்சர் தொடங்கி சினிமா, பிசினஸ் எனப் பல துறைகளிலும் உச்சம் தொட்டவர்கள் வரை யாராக இருந்தாலும், ‘பேட்டி எடுக்கணுமா, கூப்பிடுங்கப்பா கோபியை’ என இவரையே அழைக்கிறார்கள்.
இந்த நிலையில் ‘விஜய் டிவியை விட்டுப் போகிறார்’, ‘அப்ப இனி ‘நீயா நானா’ என்னவாகும்’ போன்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் வந்ததால், கோபிநாத்திடமே பேசினோம்.
“சேனல்லாம் மாறல பாஸ். வரப்போற ஐ.பி.எல் சீசன்ல இருந்து கிடைக்கப் போகிற ஒரு வித்தியாசமான அனுபவத்துக்காகக் காத்திருக்கிறேன். முதல் முறையா ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ்ல கமென்ட்ரி பேனல்ல வர இருக்கிறேன். முற்றிலும் வேறொரு களத்திலயும் இறங்கித்தான் பார்ப்போமே!” என விஷயத்தை உறுதிப்படுத்தினார்.
ஐ.பி.எல் போட்டிகளில் நடிகர் ஆர்.ஜே. பாலாஜியின் வர்ணனையை நம் ஏற்கெனவே பார்த்து விட்டோம். ஜாலி கேலி கூடவே நகைச்சுவை பன்ச் எனக் கலந்து கட்டி அவர் ஆட்டத்தை விவரிப்பதை ரசிப்பதற்கென்றே ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறதென்பதை மறுக்க முடியாது.
அதேநேரம் இவரது கமென்ட்ரியில் குறை கண்டவர்களும் இருந்தார்கள். இந்தாண்டு ஐ.பி.எல் போட்டியில் அவர் இருக்கிறாரா தெரியாது, ஆனால் கோபிநாத்தின் என்ட்ரி கிரிக்கெட் ரசிகர்களிடையே ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
தற்போதே கோபிநாத்துக்கு வாழ்த்துச் சொல்லத் தொடங்கி விட்டது அந்த ரசிகர் கூட்டம். சின்னத்திரையில், குறிப்பாக விஜய் டிவியின் என்டர்டெய்ன்மென்ட் ஏரியாவிலிருந்து ஸ்போர்ட்ஸ் பக்கம் சென்ற இரண்டாவது நபர் என கோபிநாத்தைச் சொல்லலாம். முன்னதாக விஜய் டிவியின் முக்கியமான தொகுப்பாளராக இருந்த பாவனா பல ஆண்டுகளுக்கு முன்பே ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சென்று இப்போது அங்கு கலக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours