ஜோதி பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படம்,வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலார் என்றழைக்கப்படும் ராமலிங்க அடிகளாரின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவானது. இதற்கு ஸ்ரீராமலிங்கஸ்வாமிகள் என்று இன்னொரு டைட்டிலும் வைக்கப்பட்டது.
அனைவரும் சமம், பிறப்பால் ஏற்றத்தாழ்வுகள் கூடாதுஎன்ற கருத்துகளை பேசிய வள்ளலாரின் கதையை கொண்ட இந்தப் படத்தை டி.ஆர்.ரகுநாத் இயக்கினார். இவர், அசோக்குமார் (1941), ராஜமுக்தி (1948) உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜா சந்திரசேகரின் சகோதரர். ஒலிப்பதிவாளராக வாழ்க்கையைத் தொடங்கிய ரகுநாத், தனது சகோதரர் படங்களில் பணியாற்றிய பின் இயக்குநரானார்.
இதன் திரைக்கதையை பம்மல் சம்பந்த முதலியார் எழுதினார். சி.ஏ.லக்ஷ்மண தாஸ் வசனம் எழுதிய இந்தப் படத்துக்கான பாடல்களை எழுதி, மதுரை மாரியப்ப சுவாமிகள் இசை அமைத்தார்.
ராமலிங்க அடிகளாக கே.ஏ.முத்துபாகவதர் நடித்தார். பி.ஜி.வெங்கடேசன், எம்.ஜி.சக்கரபாணி, டி.வி.ஜனகம், கே.எஸ்.சங்கர ஐயர், கே.எஸ்.வேலாயுதம், டி.ஏ.மதுரம், பி.எஸ்.கிருஷ்ணவேணி, மாஸ்டர் ராமுடு, டி.எம்.பட்டம்மாள். எம்.எஸ் கண்ணம்மாள், எஸ்.ஆர்.சாமி, ராமலட்சுமி உட்பட பலர் நடித்தனர். ஏ.கபூர் ஒளிப்பதிவு செய்த இதன் படப்பிடிப்பு கொல்கத்தாவில் உள்ள பாரத் லட்சுமி பிக்சர்ஸ் ஸ்டூடியோவில் நடந்தது.
ராமலிங்க அடிகளாரின் தந்தை ராமையாவாக பழம்பெரும் நட்டுவனார் வி.பி.ராமையா பிள்ளை, அம்மாவாக செல்வி மதுரை ஏ.சுந்தரம் நடித்தனர். ராமலிங்க அடிகளின் மூன்று பருவத்தில் வெவ்வேறு நடிகர்கள் நடித்தனர். குழந்தையாக மாஸ்டர் ராமுடு, வாலிப பருவத்தில் மாஸ்டர் மகாதேவன், பெரியவராக முத்து பாகவதர் நடித்தனர்.
என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், எம்.ஆர்.சுவாமிநாதன் நகைச்சுவை காட்சிகளில் நடித்தனர். பெரும்பாலான பாடல்கள் ஹிட்டாயின.
1939-ம் ஆண்டு இதே தேதியில் வெளியான இந்தப் படம், 18 வாரங்கள் ஓடின. வெற்றி பெற்ற இந்தப் படத்தின் பிரதி இப்போது இல்லை என்பது சோகம்.பிறகு 1971-ல் ஏ.டி.கிருஷ்ணசாமி இயக்கத்தில் வள்ளலாரின் வாழ்க்கை ‘அருட்பெருஞ்ஜோதி’ என்ற பெயரில் திரைப்படமானது.