விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியிருக்கிற ‘ரோமியோ’ திரைப்படம் ரிலீஸுக்குத் தயாராகிவிட்டது.
அறிமுக இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். நடிகர் தலைவாசல் விஜய், நடிகை மிருணாளினி ரவி ஆகியோர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். ரமலான் பண்டிகையை முன்னிட்டு இத்திரைப்படம் திரைக்கு வருகிறது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பேசிய நடிகர் தலைவாசல் விஜய், ” விஜய் ஆண்டனி ரொம்ப எளிமையானவர். அன்பாகப் பழகுவாரு . இந்த படத்தோட நிகழ்வுக்குக் கூப்பிட்டாங்க. முதல்ல வரமுடியாதுனு நினைச்சு மெசேஜ் போட்டேன். முருகதாஸ் சார் படத்தோட ஷூட் துரைப்பாக்கம்ல நடக்குது. அங்க இருந்து இந்த இடத்துக்கு சரியான நேரத்துக்கு வரமுடியாதுனு நினைச்சேன் . ஆனா, இன்னைக்கு ஷூட் தள்ளி போயிடுச்சு.அதுனால உடனே இங்க வந்துட்டேன். இந்த மிகப்பெரிய படத்துல நானும் ஒரு பங்காக இருப்பதுல மகிழ்ச்சி.” என்றார்.
இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் விநாயக் வைத்தியநாதன். இவரின் தந்தை வைத்தியநாதனும் பல ஆண்டுகளாக சினிமாவில் உதவி இயக்குநராக பணிபுரிந்து வருகிறார். இப்படத்திற்கும் உதவி இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். அவர் பேசுகையில், ” தமிழ் சினிமாவுல கதையை முக்கியமாக தேடுற ஹீரோ, விஜய் ஆண்டனி . அவர் எங்க குடும்பத்துக்கு ஒளி விளக்கு. நான் 30 வருஷமா சினிமாவுல உதவி இயக்குநராக இருக்கேன். விஜய், அஜித்துக்கு எல்லாம் கதை சொல்லியிருக்கேன். என் மகனோட குறும்படங்களை எல்லாம் பார்த்துட்டு விஜய் ஆண்டனியே என் பையன்கிட்ட போன் பண்ணி பேசியிருக்கார்.
அதுனால தான் அவரை எங்க குடும்பத்தின் ஒளி விளக்குனு சொன்னேன். என் பையன் அவருக்கு கதை தயார் பண்ணி அனுப்பினான். அவர் காலைல மூணு மணிக்கு ‘கதையை படிச்சுட்டேன்’னு மெசேஜ் பண்ணாரு. அவருக்கு வேலையை தவிர எதுவும் தெரியாதான்னு நினைச்சேன்.” என கூறினார்.
இவரை தொடர்ந்து பேசிய நடிகை மிருணாளினி ரவி,” எனக்கு இந்த படம் ஒரு வாய்ப்புங்கிறதைத் தாண்டி பெரிய பொறுப்பு. விஜய் ஆண்டனி சாரோட இந்த பயணம் சிறந்த அனுபவமாக அமைஞ்சது. நான் இந்த படத்துக்குதான் முதன்முதல்ல டப்பீங் பண்ணியிருக்கேன். இந்த படத்தோட கதையைக் கேட்கும்போது என் வாழ்க்கையோட சாரம் இந்த கதையில இருந்துச்சு. நான் இந்தப் படத்தோட கதையை கேட்டப்போ எனக்கு ரொம்ப கனெக்டாச்சு.” என்றார்.
இறுதியாக வந்து பேசிய நடிகர் விஜய் ஆண்டனி, ” நல்ல திறமையான இயக்குநரை இந்த துறைக்குள்ள அறிமுகப்படுத்தியிருக்கேன்னு ரொம்ப பெருமையை இருக்கு. தலைவாசல் விஜய சாரை ‘நீலா மாலா’ சீரியல்ல இருந்து தொடர்ந்து பார்த்திட்டு வர்றேன். மிர்ணாளினியும் நானும் நிறைய விஷயங்கள் ஷூட்டிங்ல பேசிப்போம். இந்த படத்துக்கான ப்ரோமோஷனுக்காக நம்மள பத்தி ‘கிசு கிசு’ பண்ணுவோமான்னுலாம் யோசிச்சோம்.” என சிரித்தவர், “காதலர்கள், கணவன்-மனைவி எப்படி இருக்கனும்னு இந்த படம் சொல்லும்.” என முடித்துக் கொண்டார்.
இதன் பிறகு செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். செய்தியாளர் ஒருவர் இப்படத்தின் போஸ்டரில் இடம்பெற்றுள்ள விஷயங்களை குறித்து ஒரு கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த விஜய் ஆண்டனி, ” ‘ஆண், பெண்’னு வேறுபடுத்தாதீங்க. நமக்கு இருக்கற மாதிரியான விஷயங்கள்தான் பெண்களுக்கும். நம்ம மது குடிச்சா பெண்களும் குடிக்கலாம். நான் குடியை ஆதரிக்கவில்லை. ஆண்களை மது குடிக்க வேண்டாம்னு சொன்னால் அது பெண்களுக்கும்தான். அந்த காலத்தில் திராட்சை ரசம் என இருந்தது. ஜீசஸ் கூட குடிச்சிருக்கார். ராஜா காலத்தில் சோமபானம் என இருந்தது.” என்றார்.
+ There are no comments
Add yours