விஜய் ஸ்டைலில் ஆங்கிலப் பெயருக்குத் தாவிய அஜித்
15 மார், 2024 – 10:31 IST
ஒரு காலத்தில் தமிழில் பெயர் வைக்கும் படங்களுக்கு வரி விலக்கு என்ற தமிழக அரசு ஒரு சலுகையை வைத்திருந்தது. அது இருந்தவரை தமிழ் சினிமாவில் ஆங்கிலப் பெயர்களை வைப்பதைத் தவிர்த்தார்கள். ஜிஎஸ்டி வந்த பிறகு அந்த வரி விலக்கும் காணாமல் போய்விட்டது. அதன்பின் முக்கிய நடிகர்கள், இயக்குனர்கள் பலரது தமிழ்ப் பற்றும் சேர்ந்தே காணாமல் போய்விட்டது. எல்லாரும் ஆங்கிலத்தில் பெயரை வைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
விஜய் தற்போது நடித்து வரும் படத்தின் பெயர் ‘த கிரேட்டஸ்ட் ஆப் ஆல் த டைம்’ என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதற்கு முன்பு ‘மாஸ்டர், பீஸ்ட், லியோ’ என்றே அவரது படத்தலைப்புகளும் இருந்தது.
அதேசமயம் அஜித்தின் கடைசி சில படங்களின் பெயர்கள் “விவேகம், நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு” என ஆங்கிலக் கலப்பில்லாமல் இருந்தது. தற்போது அஜித்தும் விஜய் ஸ்டைலில் அவரது அடுத்த படத்தின் பெயரை ‘குட் பேட் அக்லி’ என்று வைத்துள்ளார்.
ஹாலிவுட்டின் அதிரடி ஆக்ஷன் ஹீரோவான க்ளின்ட் ஈஸ்ட்வுட் நடிப்பில் 1966ம் ஆண்டில் வந்த ஹாலிவுட் படம் ‘தி குட், தி பேட் அன்ட் திஅக்லி’ என்ற படம் இங்குள்ள ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்ற ஒரு படம். அப்படத்தின் தலைப்பிலிருந்து ‘தி’ என்பதைத் தூக்கிவிட்டு ‘குட் பேட் அக்லி’ என வைத்திருக்கிறார்கள்.
ஆதித் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளிவந்த ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ பெயர் சாயலில்தான் இந்த ‘குட் பேட் அக்லி’யும் இருக்கிறது. அந்தப் படம் போல ‘பேட் அக்லி’ எடுக்காமல் இருந்தால் ‘குட்’ என சொல்லும்படி ஆதிக் எடுப்பார் என்று நம்புவோமாக.
+ There are no comments
Add yours