மும்பை: ‘நான் ஷாருக் கான், சல்மான் கான் மூவரும் சேர்ந்து ஒரு படம் நடிக்க வேண்டும் என்று திட்டமிட்டோம். அது குறித்து பேசவும் செய்திருக்கிறோம்” என்று நடிகர் ஆமிர் கான் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடந்த ஆனந்த் அம்பானி – ராதிகா திருமண முன்வைபவத்தில் பாலிவுட்டின் மூன்று கான்கள் என்று அழைக்கப்படும் ஆமிர் கான், ஷாருக் கான், சல்மான் கான் மூவரும் மேடையில் சேர்ந்து ஆடிய நடனம் கவனம் ஈர்த்தது. இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தை ஆக்கிரமித்தன.
இந்த நிலையில், தனது பிறந்தநாளான நேற்று (மார்ச் 14) இன்ஸ்டாகிராம் நேரலையில் நடிகர் ஆமிர் கான் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, ஷாருக் கான், சல்மான் கான் ஆகியோருடன் சேர்ந்து நடிப்பது குறித்த ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த ஆமிர் கான், “நாங்கள் மூவரும் சேர்ந்து ஒரு படம் நடிக்க வேண்டும் என்பதே எனது விருப்பமும் கூட” என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “நான், ஷாருக், சல்மான் மூவரும் இதுகுறித்து ஏற்கெனவே பேசியுள்ளோம். எங்களுக்காவும், எங்கள் ரசிகர்களுக்காகவும். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். அதற்கு தேவையான ஒரு நல்ல கதை கிடைக்கும் என்று நம்புகிறேன். சேர்ந்து பணிபுரிய நாங்கள் மூவருமே மிகுந்த ஆர்வமுடன் இருக்கிறோம். அதுகுறித்து முடிவெடுத்து நீண்ட காலம் ஆகிவிட்டது. இதுதான் அதற்கான சரியான நேரம் என்று நினைக்கிறேன்” என்று ஆமிர் கான் தெரிவித்தார்.
ஆமிர் கான், சல்மான் கான், ஷாருக் கான் மூவரும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பாலிவுட் சினிமாவில் கோலோச்சி வருகின்றனர். இதுவரை ஆமீர் – ஷாருக் இருவரும் சேர்ந்து எந்தப் படத்திலும் நடித்ததில்லை. ஆனால் சல்மான் கான் – ஆமிர் கான் இருவரும் சேர்ந்து நடித்துள்ளனர். அதே போல ஷாருக் கான் – சல்மான் கானும் சில படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர்.