கேரளா தாண்டி தமிழ்நாட்டிலும் பலத்த வரவேற்பைப் பெற்ற ‘மஞ்சும்மல் பாய்ஸ்’, வசூலில் நூறு கோடியைத் தொட்டு விட்டதாகத் தகவல்கள் வருகின்றன. பெரிய பட்ஜெட், முன்னணி நடிகர்கள் என அலட்டிக் கொள்ளாமல் விளம்பரமும் அவ்வளவாகச் செய்யாமல் இப்படியொரு வெற்றியா என வியந்து போய் பார்க்கிறது திரையுலகம்.
வரவேற்பு கிடைக்கிற அதேநேரம், கேரள எல்லையான கன்னியாகுமரி மாவட்டத்தில் வசித்து வரும் எழுத்தாளர் ஜெயமோகன் இந்தப் படம் குறித்து கடுமையான விமர்சனங்களையும் வைத்திருக்கிறார்.
இந்தச் சூழலில் ”மஞ்சும்மல் பாய்ஸ்’ படம், ‘உயிர்த்துளி’ என்கிற பெயரில் மூன்றாண்டுகளுக்கு முன்பே நாங்கள் தொடங்கிய கதை. பாடல் கம்போசிங் எல்லாம் முடிந்து படத்தின் ஷூட்டிங் தொடங்க இருந்த நிலையில் சில பிரச்னைகளால் படம் அப்படியே நின்றது. இந்த வருஷம் எப்படியும் படத்தை முடிச்சிடணும்னு நினைச்சிருந்த நேரத்துல ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ங்கிற இந்தப் படம் ரிலீசாகி எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கு” என்கிறார் அதே கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த இயக்குநர் நாஞ்சில் அன்பழகன். முரளி, லைலா நடிப்பில் வெளியான ‘காமராசு’ படத்தை இயக்கியவர் இவர்.
அன்பழகனிடம் பேசினோம்.
”ஒரு நல்ல நாள் முடிஞ்சதும் நண்பர்கள் சிலர் கொடைக்கானலுக்குப் போறாங்க. கொண்டாட்டமா பயணத்தை முடிச்சுட்டுத் திரும்பும் போது எதிர்பாராத விதமா அங்குள்ள குணா குகையில் சிக்கிக் கொள்கிறான் அதுல ஒருத்தன். அவன் எப்படி மீட்கப் படுறான்ங்கிறதுதான் என்னுடைய கதையும். கொடைக்கானல்ல நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையா வச்சுதான் கதையை டெவலப் பண்ணியிருந்தோம். ‘குணா’ படத்தின் மூலம் பிரபலமான குகைங்கிறதால அந்தப் படக் காட்சிகளைப் பயன்படுத்தறது பத்தியும் யோசிச்சு வச்சிருந்தோம். ‘குணா’ எடிட்டர் லெனின் சார்தான் எங்க படத்துக்கும் எடிட்டரா கமிட் செய்தோம்.
நடிகர் சிங்கமுத்து மகன் கார்த்திக், நடிகர் வாகை சந்திர சேகர், இன்னும் சிலர்னு ஆர்ட்டிஸ்டுகளும் கமிட் ஆகி டிஸ்கஷனெல்லாம் நடந்தது. இந்தத் தகவலெல்லாம் அப்பவே செய்தித்தாள்கள்லயும் வந்திருக்கு. குகையிலிருந்து மீட்கப்படுகிற காட்சிகளைக் கொஞ்சம் பிரமாண்டமா எடுக்கலாம்னு நினைச்சோம். அதனால படத்தின் பட்ஜெட் தொடர்பா சில சிக்கல்கள் வர, தாமதமாச்சு.
இப்ப இந்த ‘மஞ்சும்மல் பாய்ஸ்; படம் வெளியாகி ஒரே பேச்சா இருந்தப்பக் கூட அதைப் பத்தி நான் எதுவும் யோசிக்கலை. இப்ப அதிமுகவுல நட்சத்திரப் பேச்சாளரா இருக்கறதால வரப்போகிற நாடாளுமன்றத் தேர்தல் வேலைகள்ல கவனம் செலுத்திட்டிருந்தேன். சிங்கமுத்து மகன் கார்த்திக்தான் போன் பண்ணி, ‘சார், மஞ்சும்மல் பாய்ஸ்’ பார்த்தீங்களா, நம்ம கதைய எடுத்து வச்சிருக்காங்க’னு சொன்னார். உடனே படத்தைப் பார்க்கத் தியேட்டருக்குப் போனா பெரிய ஷாக்.
என்னத்தச் சொல்றதுனே தெரியல. எப்பவாவது சினிமாப் பக்கம் வர்ற இயக்குநரா இருக்கறதால இதைப் பத்தி வெளியில சொன்னா விளம்பரத்துக்குச் சொல்றேன்னு நினைப்பாங்கன்னு நினைச்சே ரெண்டு நாள் அமைதியா இருந்தேன்.
சினிமாவுல ஒரே மாதிரியான சிந்தனை ரெண்டு பேருக்கும் வராதுன்னு சொல்றதுக்கில்ல. ஆனா ஒரு கான்செஃப்டல ஒரு பட வேலை தொடங்கின கொஞ்ச நாள்லயே அதே கதை வேற சிலரால் வர்றதுதானே ஆச்சரியமாகவும் ஆதங்கமாகவும் இருக்கு. எங்ககூட டிஸ்கஷன்ல இருந்த சிலருக்கு மலையாள சினிமா உலகத்துடன் நல்ல தொடர்பு உண்டுன்னு எனக்குத் தெரியும். ஆனா இப்ப எதையும் பேசி ஒண்ணும் ஆகப்போறதில்ல. அதனால யார்கிட்டயும் எதையும் பேச வேண்டாம்னுதான் நினைக்கிறேன்.
அதேபோல, நாங்க தொடங்கியிருந்த ‘உயிர்த்துளி’ படத்தை இனி எடுக்கணுமா, எடுத்தா எப்படி எடுக்கணும்கிறதைத்தான் உட்கார்ந்து யோசிக்கணும் ” என்கிறார் அன்பழகன்.
சிங்கமுத்து மகன் கார்த்திக்கிடமும் பேசினோம்.
`உயிர்த்துளி’ டிஸ்கஷனில் நானுமே இருந்தேன். அந்தப் படத்தின் கதையும் இப்ப வெளிவந்திருக்கிற மஞ்சும்மல் பாய்ஸ் கதையும் ஒரே மாதிரியானதுதான். ஆனா எங்க படத்துல காட்சிகளைக் கொஞ்சம் வேறு மாதிரியா யோசிச்சோம். இனி அந்தப் படம் வருமா வராதாங்கிறதை இயக்குநரிடமும் தயாரிப்பாளரிடமும்தான் கேட்கணும்’ என்கிறார் இவர்.
+ There are no comments
Add yours