பிரபல பாலிவுட் நடிகையான கத்ரீனா கைஃப், சமீபத்தில் விஜய் சேதுபதியுடன் ‘மேரி கிறிஸ்துமஸ்’ படத்தில் நடித்திருந்தார்.
இப்படம் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் வெளியாகி நல்ல விமர்சனஙகளைப் பெற்றிருந்தது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள கத்ரீனா கைஃப், அழகு குறித்து இங்கு தவறான மதிப்பீடுகள் இருக்கின்றன என்றும், தான் அழகாக இல்லை என நிறைய வருத்தப்பட்டிருப்பதாகவும் மனம் திறந்து பேசியுள்ளார்.
இது குறித்து பேசியுள்ள அவர், “அழகு குறித்து இங்கு தவறான மதிப்பீடுகள் இருக்கின்றன. இதனால் நான் நிறைய மன அழுத்தங்களை அனுபவித்திருக்கிறேன். நான் பார்ப்பதற்கு அழகாக இல்லை என்று வருத்தப்பட்டிருக்கிறேன். எங்காவது வெளியில் சென்றாலும் இது குறித்து யோசித்துக் கவலைப்பட்டு தயக்கத்துடனே செல்வேன்.
இதனால், பிறர் சொல்வதுபோல அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக நிறைய விஷயங்களைச் செய்திருக்கிறேன். எனக்கு விருப்பமில்லை என்றாலும் சில விஷயங்களை நான் செய்ய வேண்டியிருந்தது. பின்னர், ‘நீ நீயாக இருப்பதுதான் அழகு’ என்பதை என் கணவர் எனக்குத் தெளிவுபடுத்தினார். எப்போதும் உங்களின் தனித்துவத்தைச் சரியாக வைத்துக் கொள்ளுங்கள். அது மிக முக்கியம்.
மற்றவர்கள் சொல்வதை வைத்தோ, பிறருடன் ஒப்பிட்டுப் பார்த்தோ நீங்கள் யார் என்பதை உங்களால் அறிய முடியாது. இப்போதெல்லாம் நான் அழகாக இருக்க வேண்டும் என்பதை விட தன்னம்பிக்கை, தெளிவான சிந்தனை, சுயமாக யோசிப்பது, தனித்துவத்துடன் இருக்க வேண்டும் என்பதில்தான் என் கவனத்தைச் செலுத்தி வருகிறேன்” என்று கூறியுள்ளார்.
+ There are no comments
Add yours