மும்பை: பா.ரஞ்சித் பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகும் புதிய படத்தில் ரன்வீர் சிங் நாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், “படத்தின் ஹீரோ குறித்து இன்னும் முடிவாகவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பா.ரஞ்சித் அளித்த பேட்டி ஒன்றில், “நான் பாலிவுட்டில் படம் ஒன்றை இயக்க உள்ளேன். ஆனால், படத்தின் நாயகன் யார் என்பது குறித்து இன்னும் முடிவாகவில்லை. சரியான நேரத்தில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்” என தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் பழங்குடியின தலைவர் பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாக உள்ளது. இந்தப் படத்தை நமாஹ் பிக்சர்ஸ் சார்பில் ஷரீன் மன்த்ரி, கிஷோர் அரோரோ ஆகியோர் தயாரிக்கிறார்கள். ‘பிர்சா’ என்ற தலைப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
‘தங்கலான்’ படத்தைத் தொடர்ந்து பா.ரஞ்சித் ‘சார்பட்டா 2’ படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்தப் படத்துக்கு பின் அவர் பாலிவுட்டுக்குச் செல்வார் என கூறப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் படத்தின் பணிகள் தொடங்கும் என திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.