மஞ்சும்மேல் பாய்ஸ் – ஜெயமோகன் கருத்துக்கு இயக்குனர் உன்னிகிருஷ்ணன் எதிர்ப்பு
12 மார், 2024 – 11:55 IST
சிதம்பரம் இயக்கத்தில் வெளிவந்த மலையாளப் படமான ‘மஞ்சும்மேல் பாய்ஸ்’ படம் தமிழகத்தில் பெரும் வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படம் குறித்து எழுத்தாளரும், திரைக்கதையாளருமான ஜெயமோகன் கடுமையான விமர்சனங்களை வைத்திருந்தார்.
“மஞ்சும்மேல் பாய்ஸ் – குடிப்பொறுக்கிகளின் கூத்தாட்டம்” என்ற தலைப்பில் அவர் சில தினங்களுக்கு ஒரு பதிவு எழுதியிருந்தார். படத்தைப் பற்றியும் மலையாளிகளைப் பற்றியும் அதில் கடுமையான விமர்சனம் இருந்தது. அதற்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புக் குரல்கள் சமூக வலைத்தளங்களில் பதிவானது.
அவரது பதிவிற்கு மலையாள இயக்குனர் உன்னிகிருஷ்ணன் தனது எதிர்ப்பை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
“மஞ்சும்மேல் பாய்ஸ்’ கதாபாத்திரங்களை குடிகார பொறுக்கிகள், முரடர்கள் என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். அவர்களது மனிதநேய விழுமியங்களைப் புரிந்து கொள்ள நீங்கள் ஒளி ஆண்டுகள் பயணிக்க வேண்டும். திரைப்படம் இன்னும் உயிருடன் இருக்கும் மனிதர்களின் குழுவை பிரதிபலிக்கிறது. சுயநலத்தில் வாழ்க்கையை நடத்துவற்கு நாம் அனைவரும் வெட்கப்படவேண்டும்.
இந்த இளைஞர்களின் குடிப்பழக்கம், நடனம், சிரிப்பு, சண்டை, சச்சரவுகள் உங்களை எரிச்சலூட்டினால், உங்களை நீங்களே இழந்துவிட்டீர்கள். மலையாள சினிமா இப்போது போதைக்கு அடிமையான எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாகச் சொன்னீர்கள். இதற்காக நீங்கள் உண்மைகளை மேற்கோள்காட்டி விளக்கம்அளிக்க வேண்டும். காவல்துறை எங்கள் ஆட்களை அடிக்க வேண்டும் என்று கூறி, நீங்கள் ஒரு முழுமையான பாசிஸ்ட் ஆக மாறிவிட்டீர்கள்,” என ஜெயமோகனை கடுமையாக விமர்சித்துள்ளார்.
+ There are no comments
Add yours