ஏ.ஆர்.முருகதாஸ்: மீண்டும் பாலிவுட்; சல்மான் கானுடன் கூட்டணி! சிவகார்த்திகேயன் படத்தின் பிளான் என்ன?

Estimated read time 1 min read

மீண்டும் பாலிவுட் செல்கிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். இப்போது சிவகார்த்திகேயனின் 23வது படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் பாலிவுட்டில் சல்மான் கானை வைத்து இயக்குகிறார் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். அந்தப் படம் அடுத்தாண்டு ரமலான் ஸ்பெஷலாக திரைக்கு வரும் என்று முருகதாஸே அறிவித்துவிட்டார்.

சிவகார்த்திகேயன் படப் பூஜையில்…

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இந்தியில் ‘கஜினி’ படத்தை ரீமேக் செய்ததன் மூலமாக பாலிவுட்டில் அறிமுகமானார். அந்தப் படம் மெகா ஹிட்டானது. தொடர்ந்து அக்‌ஷய் குமாரை வைத்து ‘துப்பாக்கி’ படத்தை ‘ஹாலிடே’ என்ற பெயரில் ரீமேக் செய்தார். கடைசியாக அவர் பாலிவுட்டில் சோனாக்‌ஷி சின்ஹாவை வைத்து ‘அகிரா’ என்ற படத்தை இயக்கினார். இந்தப் படம் அருள்நிதி நடிப்பில் வெளியான ‘மௌன குரு’ படத்தின் ரீமேக்.

அதன்பின் முருகதாஸ் தமிழில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பின் சல்மானுடன் கைகோர்த்திருக்கிறார். கடந்த 2006-ம் ஆண்டு வெளியான முருகதாஸின் தெலுங்குப் படமான ‘ஸ்டாலின்’தான் 2014-ல் சல்மான் கான் நடிப்பில் ‘ஜெய் ஹோ’ என்ற பெயரில் ரீமேக்கானது. இதை சோஹைல் கான் இயக்கியிருந்தார்.

இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ்

அந்த ஆண்டு குடியரசு தின ஸ்பெஷலாக வெளியான இந்தப் படம், அப்போதே 200 கோடி வசூலை நெருங்கி, பாக்ஸ் ஆபீஸில் அசத்தியது. அந்தப் படத்திலிருந்தே சல்மானுக்கு முருகதாஸின் மீது பெரும் மதிப்பு உண்டானது.

பாலிவுட் நடிகர்கள் தமிழ் இயக்குநர்கள், டெக்னீஷியன்கள் மீது பெரும் மதிப்பு வைத்துள்ளனர். சல்மானுடன் ‘ஜெய் ஹோ’வில் தொடங்கிய சல்மான் – முருகதாஸ் அறிமுகம், அதன் பின் இருவரும் ஒரு படத்துக்காக நேரடியாகக் கைகோர்க்கும் அளவிற்கு உறுதியான நட்பாக மாறியது. கடந்த சில வருடங்களாகவே இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், சல்மானை இயக்கும் பேச்சு இருந்து வந்தது. இதற்கிடையே சிவகார்த்திகேயன் படம் அமைந்துவிட்டதால், இப்போது அதனை இயக்கி வருகிறார்.

சென்னை உட்படப் பல இடங்களில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. முழுக்க முழுக்க ஆக்‌ஷன் ஹீரோவாக சிவா களமிறங்குகிறார் என்கிறார்கள். இதன் படப்பிடிப்பு இன்னும் சில மாதங்கள் நடக்கும் என்றும் அநேகமாக ஜூன் மாதத்திற்குள் படப்பிடிப்பு முடிவடைந்துவிடும் என்றும் சொல்கிறார்கள். அதன் பின்னர்தான் சல்மானின் படப்பிடிப்பு தொடங்குகிறது. பாலிவுட்டின் டாப் தயாரிப்பாளர் சஜித் நதியாத்வாலா 400 கோடி பட்ஜெட்டில் இதனைத் தயாரிக்கிறார் என்கிறது மும்பை வட்டாரம்.

சிவகார்த்திகேயன்

இன்று ரம்ஜான் நோன்பு ஆரம்பித்த நாள் என்பதால், இந்த இனிய நாளில் சல்மான் கானின் படத்தை அறிவித்துள்ளனர். ஆனால் சிவகார்த்திகேயனின் படத்தை முழுமையாக முடித்துவிட்டுதான் சல்மானின் படத்தைக் கையில் எடுக்கிறார் முருகதாஸ். மும்பை மற்றும் வெளிநாட்டில் இதன் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது. அடுத்தாண்டு இதே ரமலான் தினத்தில் படத்தைத் திரைக்குக் கொண்டு வருவதாகத் திட்டமிட்டுள்ளனர்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours