உலக அளவில் திரைத்துறைக்கான உயரிய விருதாகக் கருதப்படுவது, ஆஸ்கர். ஒவ்வொரு வருடமும் நடத்தப்படும் இவ்விழாவில் சிறந்த திரைப்படம், நடிகர், நடிகைகள் உட்பட பல்வேறு பிரிவுகளில் விருது வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான 96-வது ஆஸ்கர் விருது விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நேற்று நடைபெற்றது. நகைச்சுவை நடிகர் ஜிம்மி கிம்மல், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
விழாவில் கிறிஸ்டோபர் நோலனின் ‘ஓப்பன்ஹெய்மர்’, 13 பிரிவுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டு இருந்தது. இதில் சிறந்த படம், சிறந்த இயக்குநர் (கிறிஸ்டோபர் நோலன்), சிறந்த நடிகர் (சிலியன் மர்பி), துணை நடிகர் (ராபர்ட் டவுனி ஜூனியர்), ஒளிப்பதிவு (ஹோய்ட் வான் ஹோய்டெமா , படத்தொகுப்பு (ஜெனிஃபர் லேம்), ஒரிஜினல் இசை (லுட்விக் கோரன்சன்) ஆகிய 7 பிரிவுகளில் விருதுகளை அள்ளியது.
ஆஸ்கர் விருதுக்கு பலமுறை பரிந்துரைக்கப்பட்டு, ஒரு முறை கூட விருது வெல்லமுடியாமல் போன இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன், முதன்முறையாக ஆஸ்கர் விருதை இப்போது வென்றுள்ளார். இதனால் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. ‘ஓப்பன்ஹெய்மர்’ படத்தில் நடித்த சிலியன் மர்பி, ராபர்ட் டவுனி ஜூனியர் ஆகியோரும் முதல் முறையாக ஆஸ்கர் விருதைப் பெற்றனர்.
‘புவர் திங்ஸ்’ படத்தில் சிறப்பாக நடித்ததற்காக, சிறந்த நடிகைவிருது எம்மா ஸ்டோனுக்கு கிடைத்தது. அவர் ஏற்கெனவே ‘லா லா லேண்ட்’ படத்துக்காக சிறந்த நடிகை வென்றிருந்தார்.
மற்ற விருது விவரம்:
துணை நடிகை: டாவின் ஜாய் ராண்டால்ஃப் (தி ஹோல்டோவர்ஸ்), சர்வதேச திரைப்படம்: தி ஸோன் ஆஃப் இன்டரஸ்ட், தழுவல் திரைக்கதை: கார்ட் ஜெஃபர்சன் (அமெரிக்கன் ஃபிக்சன்), ஒரிஜினல் திரைக்கதை: ஜஸ்டின் டிரைட், ஆர்தர் ஹராரி (அனாடமி ஆஃப் எ ஃபால்), விஷுவல் எபெக்ட்ஸ்: காட்ஸில்லா மைனஸ் ஒன், அனிமேஷன் திரைப்படம்: தி பாய் அண்ட் தி ஹெரான், ஆடை வடிவமைப்பு: ஹாலி வாடிங்டன் (புவர் திங்ஸ்), தயாரிப்பு வடிவமைப்பு: புவர் திங்ஸ், ஆவணப்படம்: 20 டேஸ் இன் மரியுபோல் ஆவணக்குறும்படம்: தி லாஸ்ட் ரிப்பேர் ஷாப், ஒரிஜினல் பாடல்: வாட் வாஸ் ஐ மேட் பார்? (பார்பி).
சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான விருதை அறிவிப்பதற்காக வந்த ஜான்சீனா ஆடையின்றி மேடைக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான விருதை வழங்கும் முன், ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் காட்சிகள் திரையிடப்பட்டன.
+ There are no comments
Add yours