சென்னை: ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ மலையாள படம் மூலம் தமிழ் ரசிகர்களிடம் கவனம் பெற்ற ஸ்ரீநாத் பாசி, பா.ரஞ்சித் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இதன் மூலம் அவர் தமிழில் நடிகராக அறிமுகமாகிறார்.
இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் வெளியான ‘ப்ளூ ஸ்டார்’, ‘J.பேபி’ படங்களுக்குப் பிறகு அவரது நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறது. இப்படத்தை அவரது உதவி இயக்குநர் அகிரன் மோசஸ் இயக்குகிறார். ஜி.வி.பிரகாஷ் முண்ணனி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
நாயகியாக ஷிவானி ராஜசேகர் நடித்து வருகிறார். இன்னும் தலைப்பிடப்படாத இப்படத்தில் பசுபதி மற்றும் லிங்கேஷ் நடிக்கின்றனர்.படப்பிடிப்பு சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது .இந்நிலையில் தற்போது இப்படத்தில் மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசி இணைந்துள்ளார்.
இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகியுள்ளவர், தமிழில் முதல் படத்தில் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.