மாற்றத்தை தந்த சிங்கப்பெண்ணே : ஏஆர் ரஹ்மானுக்கு நன்றி சொன்ன கபடி கோச் கவிதா

Estimated read time 1 min read

மாற்றத்தை தந்த ‘சிங்கப்பெண்ணே’ : ஏஆர் ரஹ்மானுக்கு நன்றி சொன்ன கபடி கோச் கவிதா

11 மார், 2024 – 12:22 IST

எழுத்தின் அளவு:


Singhapenne-who-brought-change:-Kabaddi-coach-Kavita-thanks-AR-Rahman

அட்லி இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், விஜய், நயன்தாரா மற்றும் பலர் நடிப்பில் 2019ல் வெளிவந்த படம் ‘பிகில்’. அப்படத்தில் விவேக் எழுதி, ரகுமான், சாஷா திருப்பதி பாடிய ‘சிங்கப்பெண்ணே’ பாடல் மாபெரும் வரவேற்பைப் பெற்ற ஒரு பாடல். பெண்களின் முன்னேற்றத்திற்கும், உத்வேகத்திற்கும் பொருத்தமான ஒரு பாடலாக இப்போதும் பல இடங்களில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

அந்தப் பாடல் தனது வாழ்க்கையில் எப்படிப்பட்ட திருப்புமுனையை ஏற்படுத்தியது என ஒரு விருது வழங்கும் விழாவில், இந்திய பெண்கள் கபடி அணியின் கோச் ஆன தமிழகத்தைச் சேர்ந்த கவிதா பேசியுள்ளார்.

“2007ல இருந்து 2010 வரைக்கும் கோல்டுமெடலிஸ்ட் நான். கபடின்னா கவிதா தான்னு பேசுற அளவுக்கு பேரு, புகழ், மீடியான்னு இருந்தேன். ஆனா, கல்யாணம் ஆனதுக்குப் பிறகு எல்லாத்தையும் விட்டுட்டேன். அப்புறமா ஸ்போர்ட்ஸ் எதையும் பார்க்க மாட்டேன், ஏன் ஸ்போர்ட்ஸ் சேனல் கூட பார்க்க மாட்டேன்.

2019ல ஏஆர் ரஹ்மான் சார் இசையில ‘சிங்கப்பெண்ணே’ பாடல் வந்தது. ரொம்ப நாள் கழிச்சி நான் பார்த்த ஒரு ஸ்போர்ட்ஸ் படம் அது. எல்லாரும் தூங்கிட்ட பிறகு நைட்டு 12 மணிக்குப் பிறகு நான் அழுவேன். எப்படிலாம் இருந்தேன், இப்ப வீட்ல சமைச்சிக்கிட்டு நார்மலான பொண்ணு மாதிரி இருக்கனேன்னு அழுவேன். பேஸ்புக், இன்ஸ்டா பக்கம் போக மாட்டேன். என் கூட இருந்தவங்க எல்லாம் நல்லா இருக்காங்க. அதே ஸ்போர்ட்ஸ் பீல்டுல இருக்காங்க.

கல்யாணம் ஆனவங்களலாலயும் சாதிக்க முடியும்கற வார்த்தை வந்து என் மனசுல ஆணித்தரமா பதிஞ்சுது. ஓகே, நாம திருப்பியும் ஆரம்பிப்போம். நாம யாருன்னு காட்டுவோம்னு நினைச்சேன். கல்யாணம் ஆனதுக்குப் பிறகு நான் எப்படி இருந்தேன்னு என் உறவினர்கள் கிட்ட சொன்னது கிடையாது. எனக்கென்ன தெரியும்னு எளக்காரமா பார்த்தாங்க. நான் எவ்வளவு பெரிய ஆளுன்னு சொல்லிக்கிட்டது கிடையாது. அவங்க முன்னாடி செயல்ல செஞ்சிக் காமிக்கணும்கற எண்ணங்கள் வந்ததுக்குக் காரணமே அந்தப் பாடல்தான்.

அதுக்கப்புறமாதான் பீல்டுக்குள்ள திரும்ப போனேன். அந்தப் படத்தைப் பார்க்கும் போது நான் தியேட்டர்லயே அழுதுட்டேன். என் மாமானார், மாமியார், கணவர் லாம் கவலைப்படாதன்னு சொன்னாங்க. அதுக்கப்புறம் என் மாமானார், மாமியார்லாம் இவ்ளோ அச்சீவ் பண்ணிட்டு நீ ஏன் வீட்ல இருக்க, நீ போ, நாங்க குழந்தைய பார்த்துக்கறன்னு சொன்னாங்க. 5 வயசுல ஒரு குழந்தை.

அதுக்கப்புறமாதான் ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியால, நான் கோச்-சா சேர்ந்தேன். இந்தியாவுலயே ரெண்டு பேரைதான் தேர்வு பண்ணாங்க. அதுல நான் மட்டும்தான் பெண். குஜராத்ல வேலைக்கு சேர்ந்தேன். அதுக்கப்புறமா 2023ல ஏசியன் கேம்ஸ்ல இந்தியன் டீம் கோச்சா சேர்ந்து கோல்டு மெடல் எடுத்துக் கொடுத்தேன். 2018ல பெண்கள் அணி வெள்ளிப் பதக்கம், ஆண்கள் அணி வெண்கலப்பதக்கம் வென்றாங்க. அதனால, இந்த முறை தங்கம் வாங்கணும்னு கட்டாயம். அதனாலதான் இளம் கோச்சை போடறோம்னு விளையாட்டுத் துறை மினிஸ்டர் சொன்னாங்க. அப்புறம் கோல்டுமெடலும் எடுத்துக் கொடுத்துட்டேன்.

இப்ப ஒரு ‘தயான்சந்த்’ விருது வென்றவரா உங்க முன்னாடி நிக்கறேன். எல்லாத்துக்குமே முழுக்க முழுக்க மறைமுகமா காரணம் ஏஆர் ரஹ்மான் சார். அவருக்கு வந்து நன்றி சொல்ல ரொம்ப ரொம்ப கடமைப்பட்டிருக்கேன். இந்த நேரத்துல அவருக்கு நன்றி சொல்ல இந்த மேடைய பயன்படுத்திக்கறேன். நன்றி சார், நீங்க எங்க இருந்தாலும் இந்த வார்த்தைகள் வந்து உங்களைச் சென்றடையணும்னு நான் நினைக்கிறேன்.

நான் எப்படி வெளியே போனனேனோ அதே போல ஒரு உற்சாகத்தோட திரும்பி வந்தேனோ, அதை உலகத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் எடுத்துச் சொல்ற அளவுக்கு உங்க பாட்டு வரிகள் என்னை மாத்தியிருக்கு, அதுக்கு நானே ஒரு முன்னுதாரணம், நன்றி சார்,” என உற்சாகமாகப் பேசினார்.

கவிதாவின் பேச்சு அடங்கிய வீடியோவைப் பகிர்ந்து, “உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி கவிதா… மேலும் உயருங்கள்,” எனப் பாராட்டியுள்ளார் ரஹ்மான்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours