லாஸ் ஏஞ்சல்ஸ்: மறைந்த பாலிவுட் கலை இயக்குநர் நிதின் தேசாய்க்கு ஆஸ்கர் விருது விழாவில் மரியாதை செலுத்தப்பட்டது.
கடந்த 2023-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. இதில் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ‘ஒப்பன்ஹெய்மர்’ படம் ஏழு விருதுகளை வென்றது. மேலும் சிறந்த நடிகருக்கான விருது சிலியன் மர்ஃபிக்கும், சிறந்த நடிகைக்கான விருது எம்மா ஸ்டோனுக்கும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விழாவில் மறைந்த கலைஞர்களை கவுரவிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் உலகம் முழுவதும் மறைந்த பிரபல கலைஞர்களின் புகைப்படம் அடங்கிய காணொலி ஒன்று ஆஸ்கர் மேடையில் திரையிடப்பட்டது. அதில் கடந்த ஆண்டு மறைந்த பிரபல பாலிவுட் கலை இயக்குநர் நிதின் தேசாய்க்கு மரியாதை செலுத்தப்பட்டது.
பாலிவுட்டில் வெளியான முக்கியமான படங்களிலும், பிரபல இயக்குநர்களுடனும் கலை இயக்குநராக பணியாற்றியவர் நிதின் தேசாய். 20 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இருந்த இவர், ராஜ்குமார் ஹிரானி, சஞ்சய் லீலா பன்சாலி, அசுதோஷ் கோவாரிகர், விது வினோத் உள்ளிட்ட பல இயக்குநர்களுடன் பணியாற்றியுள்ளார். ‘1942: ஏ லவ் ஸ்டோரி’, ‘தேவ்தாஸ்’, ‘லகான்’, ‘ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் மும்பை’, ‘ஜோதா அக்பர்’, ‘பாஜிராவ் மஸ்தானி’ உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு கலை ஆக்கம் செய்திருக்கிறார்.
‘டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்’, ‘ஹம் தில் தே சுகே சனம்’, ‘லகான்’, ‘தேவ்தாஸ்’ ஆகிய படங்களின் சிறந்த கலை இயக்கத்துக்கான தேசிய விருதைப் வென்றார். கடந்த ஆகஸ்ட் மாதம், நிதின் தனது ஸ்டுடியோவில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து இன்னும் முழுமையான விவரம் எதுவும் தெரியவில்லை. இந்நிலையில், கலை இயக்குநர் நிதின் தேசாய்க்கு ஆஸ்கர் விருது விழாவில் மரியாதை செலுத்தப்பட்டது.
வாசிக்க > சிறந்த படம் ‘ஒப்பன்ஹெய்மர்’, சிறந்த நடிகை எம்மா ஸ்டோன்: ஆஸ்கர் 2024 முழு பட்டியல்