சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகளுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் ரூ.1 கோடி நிதி அளித்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. ஆனால், நிதி பற்றாக்குறை காரணமாக பல ஆண்டுகளாக கட்டிடப்பணிகள் நிறைவு பெறாமல் நிலுவையில் உள்ளது. இந்த பணி முழுமை பெற 40 கோடிக்கு மேல் தேவைப்படும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர். இதற்கான நிதியை நடிகர், நடிகைகள் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் அண்மையில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ரூ.1 கோடி நிதி வழங்கினார்.
அவரைத் தொடர்ந்து, இன்று புதிய நடிகர் சங்க கட்டிடத்தின் மேம்பாட்டுக்காக ரூ.1 கோடிக்கான காசோலையை நடிகர் கமல்ஹாசன் வழங்கினார். ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன் ஆகியோர் கமலிடமிருந்து காசோலையைப் பெற்றுக்கொண்டனர்.
மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் பெயரை நடிகர் சங்க கட்டிடத்துக்கு சூட்ட வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை எழுந்தது. தற்போது கட்டிடத்தை விரைவில் கட்டி திறப்பு விழாவை நடத்த சங்க நிர்வாகிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.