96-வது ஆஸ்கர் விருது விழா நாளை (மார்ச் 4ம் தேதி) அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவிருக்கிறது. இந்திய நேரப்படி நாளை அதிகாலை 4 மணி முதல் இந்த விருது விழா ‘Disney + Hotstar’ -ல் ஒளிபரப்பாகவுள்ளது.
இதில் ‘Oppenheimer’ 13 விருதுகளுக்கும், ‘Poor Things’ 11 விருதுகளுக்கும், ‘Killers of the Flower Moon’ 10 விருதுகளுக்கும், ‘Barbie’ 8 விருதுகளுக்கும், ‘Maestro’ படம் 7 விருதுகளுக்கும் தேர்வாகியுள்ளன. இந்த முறை இந்தியத் தயாரிப்புகள் இறுதிக் கட்டத்துக்குத் தேர்வாகாதது ஏமாற்றமே. இருப்பினும், இந்தியாவில் பிறந்த இயக்குநர் நிஷா பஹுஜா இயக்கிய ‘To Kill a Tiger’ என்ற கனடா நாட்டுத் தயாரிப்புத் திரைப்படம் ‘சிறந்த ஆவணப்படம்’ பிரிவில் இடம்பெற்றுள்ளது.
ஜார்கண்ட்டைச் சேர்ந்த இந்திய விவசாயி தன் வாழ்கையில் சந்திக்கும் பிரச்னைகளையும், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட தனது 13 வயது மகளுக்கு நீதி கேட்டுப் போராடும் அவரது போராட்டத்தையும் மையப்படுத்தியது இதன் கதைக் களம். இத்திரைப்படம் ஆஸ்கர் விருதை வெல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பு இங்கு எழுந்துள்ளது.
‘பார்பி’ படத்தை இயக்கிய பெண் இயக்குநர் கிரேட்டா கெர்விக்கின் பெயர் சிறந்த இயக்குநருக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பெறாதது சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தது. எனினும், ‘சிறந்த படம்’ பிரிவில் 3 பெண் இயக்குநர்களின் படங்கள் இடம்பெறுவது இதுவே முதன் முறை என்பதால் இவர்களில் யாருக்கு விருது கிடைத்தாலும் மகிழ்ச்சிதான் என்றே பலரும் கருதுகின்றனர்.
சமீபத்தில் நடந்த கோல்டன் குளோப் விருதுகளில் சிறந்த இயக்குநருக்கான கோல்டன் குளோப் விருதை முதன் முதலாக வென்ற நோலன், இந்த முறை ‘ஓப்பன்ஹெய்மர்’ படத்துக்காகச் சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதையும் முதன் முதலாக வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதவிர, அதிக விருதுகளுக்குத் தேர்வாகியுள்ள கிறிஸ்டோபர் நோலனின் ‘Oppenheimer’, மார்ட்டின் ஸ்கார்செஸியின் ‘Killers of the Flower Moon’ மற்றும் யோர்கோஸ் லாந்திமோஸின் ‘Poor Things’ ஆகிய திரைப்படங்களில், ‘Oppenheimer’ அதிக விருதுகளைத் தட்டிச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறந்த நடிகருக்கான விருதை கிலியன் மர்பி (ஓப்பன்ஹெய்மர்) மற்றும் சிறந்த நடிகைக்கான விருதை லில்லி கிளாட்ஸ்டோன் (கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன்) தட்டிச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முறை எந்தப் படம் அதிக ஆஸ்கர் விருதுகளை வெல்லும்? சிறந்த இயக்கம், நடிப்புக்கான விருதுகளை வெல்லப்போவது யார்? உங்களின் கணிப்பை கமென்ட்டில் சொல்லுங்கள்.
+ There are no comments
Add yours