சென்னை: “36 வயதினிலே படம் பார்த்துவிட்டு நிறைய பெண்கள் வேலைக்குப் போவதாக என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். இது மிகவும் மகிழ்ச்சியான விஷயம்” என தமிழக அரசு விருது பெற்ற பின் நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் சார்பில் கடந்த 2015-ம் ஆண்டிற்கான திரைப்படங்கள் மற்றும் சிறந்த திரைக்கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நேற்று (மார்ச் 7) மாலை சென்னையில் நடைபெற்றது. இதில் ‘36 வயதினிலே’ படத்தில் நடித்ததற்காக நடிகை ஜோதிகா சிறந்த நடிகைக்கான விருது பெற்றார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “36 வயதினிலே படம் போல ‘ராட்சசி’, ‘பொன்மகள் வந்தாள்’ படங்களில் நடித்துள்ளேன்.
நல்ல கதை வந்தால் கண்டிப்பாக நடிப்பேன். ‘36 வயதினிலே’ திரைப்படம் எனக்கு எப்போதுமே ஸ்பெஷல் படம்தான். அதற்கு எப்போது விருது கிடைத்தாலும் சந்தோஷப்படுவேன். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு நிறையப் பெண்கள் வேலைக்குப் போவதாகவும், அவர்களை வேலைக்கு அனுப்பியதாகவும் என்னிடம் சொல்லி இருக்கிறார்கள்.
அதேபோல, வீட்டுத் தோட்டப் பராமரிப்பிலும் ஈடுபட்டிருக்கிறோம் என்று அவர்கள் சொன்னதைக் கேட்டபோது அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது. பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் தொடர்ந்து நடிப்பேன்” என்றார்.
நீண்ட நாட்களுக்குப் பின் நடிகை ஜோதிகா கம்பேக் கொடுத்த படம் ‘36 வயதினிலே’. இந்தப் படத்தைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்தார். அண்மையில் மலையாளத்தில் அவர் நடித்த ‘காதல் தி கோர்’ ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றது. அடுத்து அவர் நடிப்பில் ‘சைத்தான்’ இந்திப் படம் நாளை (மார்ச் 8) திரையரங்குகளில் வெளியாகிறது.