இரு அணியினரும் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார்களைக் கூறி வரும் வேளையில், நடிகர்கள் விஜய், சூர்யா பெயர்களெல்லாம் இந்தத் தேர்தல் பரப்புரையில் அடிபட, என்ன விவகாரம் என சம்பந்தப்பட்டவர்களிடம் பேசினோம்.
“டப்பிங் பேசுகிற நடிகர்கள், யூனியன்ல உறுப்பினராக இருக்கறது வழக்கம். சில நடிகர்கள் அப்படி இருக்காங்க. சிலர் யூனியனில் சேர்வதில் ஆர்வம் காட்டாமலும் இருக்காங்க. உறுப்பினரா இருக்கிற எல்லா நடிகர் நடிகைகளும் யூனியன் செயல்பாடுகள்ல பங்கேற்கறதும் இல்லை. இந்தத் தேர்தல்ல நடிகர் விஜய், ஸ்ருதிஹாசன், சூர்யா பெயர்கள்லாம் அடிபடறதுக்குக் காரணம், ரெண்டு அணியினருக்குமான சண்டைதான்”‘ என்றார்கள் யூனியனின் சில மூத்த உறுப்பினர்கள்.
பெயர் குறிப்பிட விரும்பாத சீனியர் உறுப்பினர் ஒருவர் யூனியனுக்கு நன்கொடையாக ஒரு தொகையைத் தந்து, அதில் வேலை வாய்ப்பின்மை காரணமாக யூனியனுக்குச் சந்தா செலுத்தாமலிருக்கும் உறுப்பினர்களின் சந்தாவைச் செலுத்திக் கொள்ளுமாறு சொன்னாராம். அந்தப் பணத்தில்தான் இப்போது பொறுப்பிலிருக்கும் ராதாரவி தலைமையிலான நிர்வாகத்தினர், சந்தா செலுத்த இயலாத நிலையிலிருக்கும் உறுப்பினர்கள் எனச் சிலருக்கு சந்தா தொகையைச் செலுத்தியிருக்கிறார்கள். சுமார் 70 பேருக்கு இப்படிச் சந்தா செலுத்தப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. நடிகர் விஜய், நடிகை ஸ்ருதிஹாசன் ஆகியோரும் இந்த எழுபது பேரில் அடக்கம் என்பதுதான் ஹைலைட்.
‘நடிகர் விஜய் சந்தா செலுத்த இயலாத நிலையிலா இருக்கிறார்’ என எதிரணியினர் இதை விமர்சனம் செய்ய, ‘உச்ச நட்சத்திரங்களுக்குச் சந்தா செலுத்துவதை யூனியன் கௌரவமாகக் கருதுகிறது’ எனச் சொல்லிச் சமாளித்துள்ளனர்.
+ There are no comments
Add yours