சென்னை: மலையாளத்தில் வெளியான ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ மற்றும் ‘பிரமயுகம்’ படங்களை பாராட்டியுள்ள இயக்குநர் அனுராக் காஷ்யப் இந்தி சினிமா மிகவும் பின்தங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக Letter box இணைய தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “வெகுஜன சினிமாவில் அட்டகாசமான உருவாக்கம் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’. இந்தியாவில் வெளியாகும் பெரிய பட்ஜெட் படங்களை விட இப்படம் மிகச் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இவர்கள் எப்படி இந்தக் கதையை தயாரிப்பாளரிடம் சொல்லி ஓகே வாங்கினார்கள் என்பதை நினைத்தால் ஆச்சரியமாக உள்ளது.
இந்தியில் இப்படிப்பட்ட ஐடியாக்களை ரீமேக் மட்டும் தான் செய்ய முடியும். மூன்று சிறப்பான மலையாளப்படங்களின் அடுத்தடுத்த வெற்றிகளைப் பார்க்கும்போது, இந்தி சினிமா மிகவும் பின்தங்கியுள்ளது என்பதை உணர முடிகிறது” என தெரிவித்துள்ளார்.
அதேபோல, மம்மூட்டியின் பிரமயுகம் படத்தை குறிப்பிட்டு, “மலையாள இயக்குநர்களைப் பார்த்தால் பொறாமையாக உள்ளது. படங்களை மேம்படுத்த உதவும் மலையாள பார்வையாளர்களின் தைரியமும், தொலைநோக்கு பார்வையும் என்னை பொறாமையில் ஆழ்த்துகிறது” என்றார். மம்மூட்டியை பாராட்டிய அவர், அடுத்து ‘காதல் தி கோர்’ படத்தை பார்க்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.