கடந்த 2021-ம் ஆண்டு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் தீ மற்றும் அறிவு பாடி வெளியான ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் பட்டி தொட்டி எங்கும் பரவி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
இந்தப் பாடல் வெளியாகி மூன்று ஆண்டுகளான நிலையில் சந்தோஷ் நாராயணன் நேற்று (மார்ச் 5) வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “’எஞ்சாய் எஞ்சாமி’ பாடல் வெளியாகி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்தப் பாடலுக்குக் கிடைத்த வரவேற்பு பற்றி நீங்கள் அறிந்ததே. இந்தப் பாடல் மூலம் எங்களுக்குக் கிடைத்த வருமானம் என்ன என்பதைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
இது நாள் வரையில் இந்தப் பாடல் மூலம் ஒரு பைசா கூட வருமானம் கிடைக்கவில்லை என்பதே உண்மை சம்பந்தப்பட்ட மியூசிக் லேபிளைத் தொடர்பு கொள்ள முயற்சிகள் எடுத்து வருகிறோம். எனக்கு ஏற்பட்ட இந்த அனுபவத்தால், நான் எனது சொந்த ஸ்டுடியோவைத் தொடங்கவுள்ளேன். தனி இசைக் கலைஞர்களுக்கு, வெளிப்படைத் தன்மையுடன் இயங்கும் தளங்கள் தேவை. இதில் கூடுதலாக எனது யூட்யூப் சேனல் வருமானமும் அந்த மியூசிக் லேபிளுக்கே செல்கிறது. இதைப் பொதுத்தளத்தில் சொல்ல விரும்பினேன்.
ஆனால் தனி இசைக்கலைஞர்கள் கவலைப்பட வேண்டாம், உங்களுக்குக் கிடைக்க வேண்டியது கிடைத்தே தீரும்!”என்று பேசியிருந்தார். இந்த ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடலை மாஜா( Maajja) நிறுவனம்தான் வெளியிட்டிருந்தது. மாஜா நிறுவனத்தை அறிமுகப்படுத்தியது ஏ.ஆர்.ரஹ்மான் என்பதால் நெட்டிசன்கள் அவரை சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக சந்தோஷ் நாராயணன் பதிவு ஒன்றை தனது X தளத்தில் பதிவிட்டிருக்கிறார். அதில் “ என் பாசத்துக்குரிய ஏ.ஆர் ரஹ்மான் சார் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், இந்த மாஜா விவகாரத்தில் எப்போதுமே எங்களுக்கு ஆதரவாக இருந்தார். பல போலி வாக்குறுதிகள் மற்றும் தீய நோக்கங்களால் அவரும் பாதிக்கப்பட்டுள்ளார்.
அறிவு, தீ, நான் உட்பட பல சுயாதீன கலைஞர்களுக்கு எந்தவகையிலும் வருமானம் கிடைக்கவில்லை. இந்தத் தருணத்தில் சுயாதீன கலைஞர்களை ஆதரிக்குமாறு நான் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
வரும் நாள்களில் என்னுடைய வழிகாட்டி பா.ரஞ்சித் மற்றும் ராப் பாடகர் அறிவு ஆகியோருடன் இணைந்து பணிபுரிவேன். மேலும் அனைத்து சுயாதீன கலைஞர்களுக்கும் அவர்களின் கட்டண நிலுவைத் தொகை விரைவில் வழங்கப்படுவதை உறுதிசெய்ய விரும்புகிறேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.
+ There are no comments
Add yours