ஏரியல் ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது `ஆபரேஷன் வேலன்டைன்’ (Operation Valentine).
தெலுங்கு நடிகர் வருண் தேஜ், பாலிவுட் நடிகை மனுஷி சில்லார் ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கிற இப்படத்தை அறிமுக இயக்குநர் சக்தி பிரதாப் சிங் இயக்கியிருக்கிறார். 2019-ம் ஆண்டு நிகழ்ந்த புல்வாமா தாக்குதல் மற்றும் பாலாகோட் வான் தாக்குதல் சம்பவத்தைத் தழுவி ஒரே சமயத்தில் தெலுங்கிலும் இந்தியிலும் இத்திரைப்படத்தை எடுத்திருக்கிறார்கள். சமீபத்தில்கூட இந்த இரண்டு சம்பவங்களையும் மையப்படுத்தி பாலிவுட் இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் ‘ஃபைட்டர்’ என்ற திரைப்படம் வெளியாகியிருந்தது.
இந்திய வான்படையில் விங் கமாண்டராக இருக்கும் அர்ஜுன் (வருண் தேஜ்) நிலப்பரப்பிற்கு நெருக்கமான இடைவெளியில் விமானத்தில் பறப்பதால் ஒரு விபத்தைச் சந்திக்கிறார். அந்த விபத்தினால் தனது நண்பனையும் (நவதீப்) இழந்து விடுகிறார். அந்த விபத்தில் ஏற்பட்ட காயங்களிலிருந்து மீண்டு வந்தவருக்கு அடுத்தபடியாக ‘ஆபரேஷன் வேலன்டைன்’ மிஷன் ஒப்படைக்கப்படுகிறது. இந்த மிஷனில் அர்ஜுனும் அவரின் வான்படை குழுவும் வெற்றி பெற்றார்களா என்பதே இந்த ஏரியல் ஆக்ஷன் திரைப்படத்தின் கதை.
வான்படை வீரராகத் திடமான உடல்மொழியுடன் அந்தக் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை வழங்கியிருக்கிறார் கதாநாயகன் வருண் தேஜ். அவருடைய காதலியாக நடித்திருக்கும் மனுஷி சில்லார் வான்படை வீரராகச் சில இடங்களில் மட்டும் ஸ்கோர் செய்கிறார். பெரும்பான்மையான எமோஷன் காட்சிகளில் செயற்கைத் தன்மை கலந்த பெர்பாமென்ஸே அவரிடமிருந்து எட்டிப் பார்க்கிறது. தெலுங்கு நடிகர் நவதீப்பின் கேமியோ ரோலின் நிலைமையும் சோகக்கதைதான். சிறிது நேரம் தோன்றினாலும் பாலிவுட் நடிகர் பரேஷ் பகுஜா தனது பாத்திரத்திற்கு நியாயம் செய்யும் நடிப்பை வழங்கியிருக்கிறார்.
2019 பாலாகோட் வான்படை தாக்குதலில் ஈடுபட்ட ஒரு வான்படை வீரரின் கதாபாத்திரத்தை ஏற்று அந்தப் பாத்திரம் வழி கடத்த வேண்டிய நுண்ணுணர்வுகளை அட்டகாசமாகத் திரையில் கொண்டு வந்திருக்கிறார்.
ஏற்கெனவே நாம் இப்படியான விமானப் படை சம்பந்தப்பட்ட திரைப்படங்களில் பார்த்துப் பழகிய டேக் ஆஃப் ஆகாத காட்சிகளை ஒட்டுமொத்தமாகக் கோர்த்து திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். அந்த க்ளிஷே காட்சிகளும் அழுத்தமின்றி எழுதப்பட்டுள்ளதால் படத்தின் முக்கியப் புள்ளியான புல்வாமா தாக்குதல் காட்சி உட்படச் சின்ன சின்ன எமோஷன் சீன்களும் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் விமான ஓடுதளத்தில் சட்டெனத் தரையிறங்கிய விமானமாக நிதானமின்றி கடந்து செல்கின்றன. இதுபோன்ற பலவீனமான எழுத்துப் பணி அர்ஜூன் (வருண் தேஜ்) மற்றும் ஆக்னா கில் (மனுஷி சில்லார்) இடையேயான கெமிஸ்ட்ரியை ஃபெயிலாக்கி விட்டிருக்கிறது.
வசனங்களிலும் அதிகப்படியாக வழக்கொழிந்த தன்மையே எட்டிப் பார்க்கிறது. அறிமுக இயக்குநர் சக்தி பிரதாப் சிங் இப்படியான குறைகளைக் கவனித்திருக்கலாம்.
தொழில்நுட்ப ரீதியாக வலிமையுடன் திகழ வேண்டும் எனப் படக்குழு திட்டமிட்டிருக்கிறது. ஆனால் அந்தத் திட்டத்தை முழுமையாகப் பின்பற்றாமல் ஆங்காங்கே சொதப்பியிருக்கிறார்கள். வான்வெளி பகுதிகளில் நிகழும் அதிகளவிலான ஆக்ஷன் காட்சிகளைச் சுற்றிச் சுழன்று கச்சிதமான ப்ரேமில் படம் பிடித்து புதுமையான அனுபவத்தைக் கொடுத்த ஒளிப்பதிவாளர் ஹரி வேதாந்தத்திற்கு மட்டும் கிளாப்ஸ்!
ஆனால், இந்த அனுபவத்தை முழுமையாகப் பார்வையாளர்களிடம் கடத்துவதற்கு கிராபிக்ஸ் பணிகள் அளப்பரிய பங்காற்றியிருக்க வேண்டும். ஆனால், அதன் நிலைமையோ பரிதாபத்தின் உச்சம்! முதல் பாதியில் கவனம் செலுத்திய படத்தொகுப்பாளர் நவீன் நூலி, இரண்டாம் பாதியில் ஒன்றுகூடும் பலவீனமான காட்சிகளை ஸ்ட்ரிக்ட்டாக டீல் செய்திருக்கலாம்.
ஸ்டன்ட் இயக்குநர்கள் அதிரடியான ஆக்ஷன் காட்சிகளை அமைத்துக் கொடுத்துப் படத்தை ஸ்மூத்தாக லேண்ட் செய்ய முயற்சி செய்திருக்கிறார்கள். அதற்கேற்ப பின்னணி இசையும் வழிகாட்டியாகக் கொஞ்சம் உதவிக்கரம் நீட்டியிருக்கிறது. ஆனால், எப்போது முடியும் என்றே தெரியாமல் நீண்டு கொண்டிருக்கும் பயோபிக்/உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்படும் படங்களின் சீசனின் தாக்கத்தால் இந்தப் படமும் நாம் ஏற்கெனவே பார்த்து அலுத்துப்போன படங்களின் ஒன்றாக வாலண்டியராக இணைந்து கொள்கிறது.
வழக்கமான டெம்ப்ளேட் காட்சிகளைத் தவிர்த்து புதுமையான காட்சிகளை அமைப்பதற்கும் கிராபிக்ஸ் பணிகளுக்கும் ஆழமான கவனத்தைக் கொடுத்திருந்தால் இந்த ஆபரேஷன் சக்சஸ் மீட்டரை எட்டியிருக்கும்.
+ There are no comments
Add yours