என்னை பற்றி கட்டு கதைகளை பரப்பினார்கள் : ஆர்.கே.சுரேஷ்
04 மார், 2024 – 12:15 IST
தமிழில் ‘காடுவெட்டி’ என்ற பெயரில் ஒரு படம் தயாராகி உள்ளது. இதில் காடுவெட்டியாக ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ளார். சோலை ஆறுமுகம் இயக்கி உள்ளார். ஸ்ரீகாந்த் தேவா பின்னணி இசை அமைத்திருக்கிறார். வணக்கம் தமிழா சாதிக் பாடல்களுக்கு இசை அமைத்திருக்கிறார். படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது.
இதில் நாயகனாக நடித்துள்ள ஆர்.கே.சுரேஷ் ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் மோசடி வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். பல மாதங்கள் வெளிநாட்டில் இருந்த அவர் பின்னர் இந்தியா திரும்பி போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது.
விழாவில் அவர் பேசியதாவது: என்னைப்பற்றிய எத்தனையோ கட்டுக்கதைகள் கற்பனைகளை கிளப்பிவிட்டார்கள். நான் 100 படங்கள் விநியோகம் செய்திருக்கிறேன். எத்தனையோ படங்கள் தயாரித்திருக்கிறேன். 40 படங்கள் நடித்திருக்கிறேன். சினிமாவில் எனக்கு 15 வருட உழைப்பு உண்டு. எல்லா அரசியல்வாதிகள் எல்லா சாதிக்காரர்களுடனும் பழக்கம் உண்டு.
அப்படியான சூழலில் என்னைப்பற்றி தவறான செய்திகள் வெளிவந்தது. 15வருடமாக சினிமாவில் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்த நான் தவறு செய்திருப்பேனா? வடமாவட்டங்கள் தென் மாவட்டங்களில் ரசிகர்கள் என் மீது அன்பு வைத்திருக்கிறார்கள். அதனால் சினிமா, அரசியலை விட்டு நான் போகமாட்டேன்.
காடுவெட்டி கேரக்டரில் நடித்ததற்காக நான் பெருமைப்படுகிறேன். இயக்குனர் சோலை ஆறுமுகம் கதையை சொன்னதுமே அவரை மைண்ட்ல வச்சுதான் நடித்தேன். குரு ஐயாவின் குடும்பத்துக்கு சொல்றேன். இந்தப்படம் உங்களுக்கு பெருமை சேர்க்கும். இது உணர்வு சார்ந்த படம். இதை தமிழ்நாடு முழுவதும் வரவேற்பார்கள். இது சாதி படம் இல்லை. நான் எந்த சாதியையும் தவறாக பேச மாட்டேன். சாதி என்பது உணர்வு மட்டுமே.
இவ்வாறு அவர் பேசினார்.
+ There are no comments
Add yours