சென்னை: வெளியானபோது வெறும் தமிழகத்தில் 50 திரைகளில் மட்டுமே ஓடிக் கொண்டிருந்த ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ திரைப்படம் தற்போது 250-க்கும் மேற்பட்ட திரைகளை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’. சிதம்பரம் எஸ் பொடுவால் இயக்கியுள்ளார். சவுபின் ஷாயிர், ஸ்ரீநாத் பாஷி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் ரூ.100 கோடி வசூலை நெருங்கி வருகிறது. இதற்கு தமிழ் ரசிகர்கள் கொடுத்த வரவேற்பும் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. ’குணா’ குகையில் நடக்கும் கதையும், இளையராஜா இசையும் தமிழ் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இந்த நிலையில், படம் வெளியான பிப்.22ஆம் ஆம் தேதியன்று தமிழகம் முழுவதும் வெறும் 50 திரைகளில் மட்டுமே ஓடிக் கொண்டிருந்த ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ திரைப்படம் தற்போது சுமார் 250 திரைகளுக்கு மேல் திரையிடப்பட்டுள்ளது.
சென்னை, கோவை, திருச்சி போன்ற பெரிய நகரங்கள் மட்டுமின்றி சிறிய நகரங்களிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. பெரிய அளவில் எந்த ஒரு விளம்பரமோ, யூடியூப் நேர்காணல்களோ, பிரம்மாண்ட ஆடியோ வெளியீட்டு விழாக்களோ நடத்தாமல் முழுக்க முழுக்க பாசிட்டிவ் விமர்சனங்களால் மட்டுமே இப்படத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது. ஏறக்குறைய படம் பார்த்த அனைவருமே படக்குழுவினரை நெகிழ்ச்சியுடன் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.