சென்னை: “என்னைப் பற்றி தவறான செய்திகள் வெளிவந்தது. சினிமா, அரசியலை விட்டு நான் போகமாட்டேன். சாதி என்பது உணர்வு மட்டுமே” என தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் பேசினார்.
மஞ்சள் ஸ்கிரீன்ஸ் தயாரிப்பில் சோலை ஆறுமுகம் இயக்கியுள்ள ‘காடு வெட்டி’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ஆர்.கே.சுரேஷ், “என்னைப் பற்றிய எத்தனையோ கட்டுக் கதைகள் கற்பனைகளை கிளப்பிவிட்டார்கள். நான் 100 படங்கள் விநியோகம் செய்திருக்கிறேன். எத்தனையோ படங்கள் தயாரித்திருக்கிறேன்; 40 படங்கள் நடித்திருக்கிறேன்.
சினிமாவில் எனக்கு 15 வருட உழைப்பு உண்டு. எல்லா அரசியல்வாதிகள், எல்லா சாதிக்காரர்களுடனும் பழக்கம் உண்டு. அப்படியான சூழலில் என்னைப் பற்றி தவறான செய்திகள் வெளிவந்தது. 15 வருடமாக சினிமாவில் எந்த பிரச்சினையும் இல்லாமல் இருந்த நான் தவறு செய்திருப்பேனா? வடமாவட்டங்கள் தென் மாவட்டங்களில் ரசிகர்கள் என் மீது அன்பு வைத்திருக்கிறார்கள். அதனால் சினிமா, அரசியலை விட்டு நான் போகமாட்டேன்.
இப்போது ‘காடுவெட்டி’க்கு வருவோம். இந்த கதாபாத்திரத்தில் நடித்ததற்காக நான் பெருமைப்படுகிறேன். இயக்குநர் சோலை ஆறுமுகம் கதையை சொன்னதுமே காடுவெட்டி குருவை மனதில் வைத்து தான் நடித்தேன். காடுவெட்டி குரு குடும்பத்துக்கு சொல்கிறேன். இந்தப்படம் உங்களுக்கு பெருமை சேர்க்கும். இது உணர்வு சார்ந்த படம். இதை தமிழகம் முழுவதும் வரவேற்பார்கள். இது சாதி படம் இல்லை. நான் எந்த சாதியையும் தவறாக பேச மாட்டேன். சாதி என்பது உணர்வு மட்டுமே” என்றார்.
இதில் கலந்துகொண்ட இயக்குநர் மோகன் ஜி பேசுகையில், “இந்தப் படம் பல பிரச்சனைகளை சந்தித்து வெளிவர உள்ளது. ‘திரெளபதி’ படத்தின் ரிலீஸுக்காக நான் பட்ட கஷ்டம் அதிகம். அதேபோல் இந்தப் படமும் பல பிரச்சினைகளையும் வழக்குகளையும் சந்தித்துள்ளது. பிரச்சினைகளை சந்தித்து ரிலீஸ் ஆகும் படங்கள் பெரிய வெற்றியை அடைந்துள்ளது.
அந்த வகையில் ‘காடுவெட்டி’ மிகப் பெரிய ஹிட் ஆகும். குறிப்பாக இளைஞர்கள் கொண்டாடுவார்கள். தமிழகத்தில் தவறான காதலை எதிர்த்தவர் காடுவெட்டி குருதான். இந்தப் படத்தில் பெரிய சம்பவம் இருக்கு. ‘திரெளபதி 2’ விரைவில் தொடங்கும்” என்றார்.