டியூஷன் சென்று வந்த பத்தாவது படிக்கும் தன் மகனை 10 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று தாக்கியதாகக் காவல் துறையில் புகார் ஒன்றைக் கொடுத்துளளார் நடிகர் பிர்லா போஸ்.
`திருமதி செல்வம்’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருக்கிற இவர், சமீபமாகத் தமிழ் சினிமாவில் போலீஸ் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தற்போது ஷூட்டிங் நடைபெற்று வரும், ரஜினியின் நடிப்பில் வெளியாகவிருக்கிற `வேட்டையன்’ படத்திலுமே போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். என்ன நடந்தது என அவரிடமே கேட்டோம்.
”சென்னையில் நான் குடியிருக்கிற அபார்ட்மென்ட்ல கீழ் வீட்டுல இருக்கிறவங்களுடன் ஒரு பிரச்னை. அந்த வீட்டுப் பையன் உடல்நிலை சரியில்லாம இருந்தான். அவனைப் பார்க்க அவனது நண்பர்கள் சிலர் வந்தப்ப அதுல ஒரு பையன் என் காரைக் கொஞ்சம் சேதம் பண்ணிட்டான்.’பார்க்கிங்’னு ஒரு படம் சமீபத்துல வந்துச்சே, அந்தப்படத்தின் கதை போல, வாகனங்களை பார்க்கிங் செய்கிற பிரச்னைதான்.
அது பத்தி நான் அந்தப் பையனுடைய பெற்றோர்கிட்ட போய் பேசினப்போ, வயது வித்தியாசம் இல்லாம அந்தப் பையன் என்னைத் தரக்குறைவா பேச பதிலுக்கு என் மகனும் சத்தம் போட்டான்.இது நடந்து ரெண்டு மாசம் ஆகிடுச்சு. நானுமே அந்த விஷயத்தை அத்தோடு மறந்துட்டு ஷூட்டிங்ல கவனம் செலுத்தத் தொடங்கிட்டேன்.
இந்த நிலையில் கடந்த வாரம் முழுக்க நான் வீட்டுல இல்ல. ‘வேட்டையன்’ பட ஷூட்டிங்கில் இருந்தேன். இதைப் பயன்படுத்திகிட்டு, டியூசன் போயிட்டு வந்த என் மகனை பத்து பேர் கொண்ட கும்பல் வழியில் மறிச்சு வேறொரு இடத்துக்கு இழுத்துட்டுப் போய் எல்லாருமா சேர்ந்து தாக்கியிருக்காங்க.
தாக்குதலை நான் முன்னாடி சொன்ன கீழ் வீட்டுப் பையன் திட்டமிட்டுச் செய்திருக்கான். அவனுடைய நண்பர்களைக் கூட்டி வந்து தாக்கியிருக்கான். ரத்தம் வராதபடி உள் காயம் இருக்கிறபடி தாக்கியிருக்காங்க. ஷூட்டிங்கிலிருந்த நான் உடனடியா கிளம்பி வந்து பார்த்தப்போ என் மகனால எழுந்திருக்கக்கூட முடியல. அதேநேரம் பெரியளவுல ரத்தமும் வரல. தனியார் மருத்துவமனையில் சேர்க்க போனப்போ, ட்ரெய்னிங் எடுத்து அடிச்சவங்க மாதிரி தாக்கியிருக்காங்க. மாணவர்கள் அடிச்சிருக்காங்கன்னா நம்பவே முடியலை. அதனால நீங்க அரசு மருத்துவமனைக்குக் கூட்டிட்டுப் போங்க, அதுதான் சரியா இருக்கும்னு சொல்லியிருக்காங்க. அடிச்சது எல்லாம் மாணவர்கள்தானா அல்லது கூலிப்படையான்னு தெரியலை. மாணவர்களா இருந்தா, இப்படி தாக்குதல் நடத்த பயிற்சி பெற்றிருக்காங்களானு யோசிச்சா அதிர்ச்சியா இருக்கு.
மாணவர்கள் மத்தியில இந்த மாதிரி பழிவாங்கும் குணம், அடியாள் வைத்துத் தாக்குதல் நடத்துகிற கலாசாரம் எல்லாம் எப்ப எப்படி வந்ததுன்னே தெரியலை.
முதல் சம்பவம் நடந்தப்பவும் நான் சட்டப்படியான நடவடிக்கைதான் எடுக்கணும்னு போலீஸ்க்குப் போனேன். இப்ப என் மகன் தாக்கப்பட்டவுடனேயும் போலீஸ்லதான் புகார் தந்தேன். சம்பந்தப்பட்ட ஏரியாவின் சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையும் வழக்கு பதிந்து, சி.எஸ்.ஆர் பதிவு செய்திருக்கிறார்கள்.
இந்த விஷயம் குறித்து நான் வெளியில் சொல்ல நினைத்ததற்கு முக்கியக் காரணம், மாணவர்கள் மத்தியில் தலைதூக்கும் இதுபோன்ற வன்முறை எண்ணங்கள் களையப்பட வேண்டுமென்பதே.
இதே பையன் மேல எங்க ஏரியாவுலயே இன்னொரு புகாரும் இருக்குனு இப்பச் சொல்றாங்க. அந்த விஷயத்துல சம்பந்தப்பட்ட பையனுடைய பெற்றோர் போலீசுக்கெல்லாம் போனா, படிப்பு பாதிக்கப்படுமேனு புகார் தராம இருந்துட்டாங்களாம். ஒரு தரப்பு சைலன்ட்டா போறதுமே குற்றம் செய்றவங்களுக்குச் சாதகமாகிடுது.
மாணவர்கள் மத்தியில் ஒற்றுமை, நல்ல பழக்க வழக்கங்களை வளர்க்கறதுல குடும்பம், பள்ளி, சமுதாயம்னு எல்லாருக்குமே சம பொறுப்பு இருக்கு. இதுல எங்கேயோ ஒரு இடத்துல பிசகினாலும் பாதிப்புதான்.
பெற்றோர், பள்ளிக்கூடங்கள்ல ஆசிரியர்கள், இவங்களுடன் சேர்ந்து காவல்துறையும் யோசிக்கும் போதுதான் இது மாதிரியான பிரச்னைகள்ல நல்லவொரு தீர்வு கிடைக்கும்னு நம்பறேன்’ என்கிறார் பிர்லா போஸ்.
+ There are no comments
Add yours