அரசியலில் இறங்க இதுதான் சரியான நேரம் – கங்கனா ரணாவத்
29 பிப், 2024 – 11:33 IST
பாலிவுட்டின் பரபரப்பான நாயகிகளில் ஒருவர் கங்கனா ரணாவத். பாஜக ஆதரவு நடிகைகளில் முக்கியமானவர். டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய கங்கனா அரசியலில் இறங்குவது பற்றிய அவரது கருத்தைத் தெரிவித்துள்ளார்.
“இந்த நாடு எனக்கு எவ்வளவோ தந்திருக்கிறது. அதைத் திருப்பிக் கொடுக்க நான் மிகவும் பொறுப்பாக உணர்கிறேன். நான் எப்போதும் ஒரு தேசியவாதியாகவே இருந்து வருகிறேன். அந்த இமேஜ் எனது புகழ் பெற்ற நடிப்பு வாழ்க்கையையும் எடுத்துக் கொண்டது. நான் ஆழமாக நேசிக்கப்படுகிறேன், பாராட்டப்படுகிறேன் என்ற விழிப்புணர்வு எனக்கு இருக்கிறது. நான் அரசியலுக்கு வர விரும்பினால் அதற்கான சரியான நேரம் இது என்று நினைக்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
வரும் பார்லிமென்ட் தேர்தலில் கங்கனா போட்டியிடுவார் என்ற தகவல்கள் கடந்த சில மாதங்களாகவே இருந்து வருகிறது. கங்கனாவின் கருத்தையடுத்து அவர் அரசியலில் இறங்கத் தயாராகி வருவதாகவே தெரிகிறது.
கங்கனாவின் அடுத்த படமாக ‘எமர்ஜென்சி’ படம் வெளியாக உள்ளது. 1975ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் இந்திரா ‘எமர்ஜென்சி’, அதாவது நெருக்கடி நிலை அவசரகால பிரகடனம் என்ற நிலையைக் கொண்டு வந்தார். இந்திய அரசியல் வட்டாரங்களில் மிகவும் சர்ச்சையை ஏற்படுத்திய அந்தக் காலகட்டத்தில் நடந்த அரசியல் விஷயங்களைத்தான் ‘எமர்ஜென்சி’ படம் சொல்லப் போகிறது. அதில் அப்போதைய பிரதமர் இந்திரா கதாபாத்திரத்தில் கங்கனா நடித்துள்ளார். இந்த ஆண்டில் வெளிவர உள்ள இப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தலாம் என யூகங்கள் எழுந்துள்ளன.
+ There are no comments
Add yours