நிறைய தமிழ் படங்கள் : பிரியங்கா திம்மேஷின் ஆசை
29 பிப், 2024 – 10:56 IST
கன்னட நடிகையான பிரியங்கா திம்மேஷ் 6 ஆண்டுகளுக்கு முன்பு ‘உத்தரவு மகாராஜா’ படத்தில் நடித்தார். தற்போது மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார். அவர் நடித்து முடித்துள்ள ‘சத்தமின்றி முத்தம் தா’ படம் நாளை வெளிவருகிறது. இந்த படத்தை கார்த்திகேயன் தயாரித்துள்ளார். யுவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜூபின் இசை அமைத்துள்ளார். ராஜ்தேவ் இயக்கி உள்ளார். ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடித்துள்ளார். சஸ்பென்ஸ் திரில்லர் படமாக உருவாகி உள்ளது.
படத்தில் நடித்திருப்பது குறித்து பிரியங்கா திம்மேஷ் கூறும்போது, “சில வருட இடைவெளிக்குப் பிறகு தமிழுக்கு வந்திருக்கிறேன். இந்தப் படத்திற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது திடீரென்று நடந்த ஒரு விஷயம். இதற்காக நான் ஶ்ரீகாந்த் சாருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். இயக்குநர் என்னிடம் கதை சொல்லும்போது எனக்கு மிகவும் பிடித்தது. இந்தப் படத்திற்குத் தேவையான உழைப்பைக் கண்டிப்பாகக் கொடுப்பேன் என்று சொன்னேன், சொன்னதைச் செய்துள்ளேன் என்று நம்புகிறேன். நான் தமிழ் கற்று வருகிறேன். தமிழ் கற்றுக்கொண்டு தமிழில் நிறையப் படங்கள் செய்ய வேண்டும் என்பது தான் என் ஆசை. இந்தப்படம் எனக்கு இதுவரை செய்த படங்களிலிருந்து வித்தியாசமானதாக இருந்தது” என்றார்.
+ There are no comments
Add yours