"ஆண்களுக்கு இன்ட்ரோ சாங், பெண்களுக்கு மட்டும் கவர்ச்சியான பாடலா?" – ரேப் பாடகர் நவீனி (NAVZ-47)

Estimated read time 1 min read

பெண்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் சுயாதீன இசைத் துறையில் கலக்கிக் கொண்டிருக்கிறார், நவீனி.

இவரை சுருக்கமாக ‘Navz47’ என அழைப்பார்கள். ‘நீயே ஒளி’ பாடல் மூலமாகப் பலருக்கு இவருடைய குரல் ஊக்கமளித்திருக்கிறது. தன்னைச் சுற்றி நிகழும் சம்பங்கள் குறித்து பேச்சு வடிவிலேயே ராப் பாடல்கள் அமைத்து வருபவர் இப்போது ‘கோக் ஸ்டுடியோ’ தமிழ் இரண்டாவது சீசனில் ‘ஏலே மக்கா’ என்ற பாடலைப் பாடியிருக்கிறார். அவரைச் சந்தித்துப் பேசினோம்.

‘Navz-47’ எனப் புனைபெயர் வைப்பதற்குக் காரணம் என்ன?

“என்னுடைய பெயர் நவீனி (Naveeni). இதனைச் சுருக்கினால் ‘Navz’ என்ற வார்த்தை வரும். நியூமராலஜி பார்த்து ’47’ என்ற எண்ணை உடன் சேர்த்துக் கொண்டேன். ஏ.கே-47 எந்தளவிற்கு சக்தி வாய்ந்ததோ, அந்த அளவிற்கு என்னுடைய வார்த்தைகளும் வலிமையாக ஒலிக்க வேண்டும் என்பதற்காக ‘Navz 47’ என வைத்துவிட்டேன்.”

NAVZ-47

உங்களுடைய மியூசிக் கரியர் எப்படித் தொடங்கியது ?

“நான் இலங்கையிலுள்ள யாழ்பாணத்தில்தான் வளர்ந்தேன். போர் சூழல் காரணமாக நாங்கள் புலம்பெயர்ந்து வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டோம். என்னுடைய 15 வயதில் நான் என்னுடைய முதல் பாடலை எழுதினேன். ஒரு நாள் இரவில் என் கனவில் தோன்றியவற்றை வைத்துதான் அந்தப் பாடலை எழுதினேன். இதன் பிறகுதான் ‘ராப்’ என்ற இசை வகை இருப்பது எனக்குத் தெரியவந்தது. எனது தம்பியும் அப்போது ராப் பாடகர். அவர் டூப்பாக் (Tupac) பாடல்களைக் கேட்குமாறு எனக்குப் பரிந்துரை செய்தார். இப்படியான வழிகளில்தான் ராப் பாடல்கள் குறித்து முழுமையாக தெரிந்துக் கொண்டேன். ஒரு முறை நான் இசை பயில்வதற்குச் சென்ற இடத்தில் என்னை சேர்த்துக் கொள்ளமாட்டேன் எனக் கூறிவிட்டார்கள். நான் எனது கூந்தலை ஒரு வகையில் பின்னி வகுப்பிற்குச் செல்வேன். கர்னாடிக் இசை வடிவத்தை கற்றுக் கொள்பவர்களுக்கு சில வரையறைகள் வைத்திருப்பார்கள். அதன் பிறகு நான் கேட்டேன், ‘நீங்கள் எனது கூந்தலின் வடிவத்தை மாற்றினாலும் என்னுடைய குரல் மாறாது’ எனக் கூறினேன். என்னை அங்கிருந்து அனுப்பிவிட்டார்கள்.”

இசையில் பல வகைகள் இருக்கும்போது குறிப்பாக ராப் இசை வகையைத் தேர்ந்தெடுத்தது ஏன்?

“ராப் இசைதான் என்னைத் தேர்ந்தெடுத்தது (சிரிக்கிறார்). நான் முறையாக சங்கீதம் படிக்கவில்லை. ராப் இசை வடிவம் கவலை, கோபம் என என்னுடைய மனநிலைகளை பேச்சு வடிவத்திலேயே வெளிப்படுத்த ஏதுவாக இருக்கிறது.”

NAVZ-47

ராப் கலாசாரம் நீங்கள் தொடங்கிய சமயத்தில் எப்படி இருந்தது? இப்போது எப்படி இருக்கிறது?

“அப்போது ராப் பாடல்களுக்கு முதல் உரிமை கொடுக்கவில்லை. இப்போது அப்படியான நிலைமை இல்லை. மேற்கத்திய நாடுகளில் இருப்பது போன்ற நிலைமை இப்போது தெற்கு ஆசியாவிலும் இருக்கிறது. அதிலும் குறிப்பாக சென்னை, சுயாதீன இசைக் கலைஞர்களுக்கு மையமாக திகழ்கிறது. நான் என்னுடைய கரியரைத் தொடங்கிய சமயத்தில் சில பெண்கள் மட்டுமே ராப் இசையை இசைக்கத் தொடங்கினார்கள். ஆனால், இப்போது அப்படி இல்லை. பல பெண்கள் இந்த இசை வகையை பின் தொடர்கிறார்கள்.”

இப்போது ‘கோக் ஸ்டுடியோ’ தமிழில் ‘ஏலே மக்கா’ என்ற பாடலில் வேலைப் பார்த்திருக்கிறீர்கள், அந்தப் பாடல் பற்றி…

“நான் கோக் ஸ்டுடியோவின் முதலாவது சீசனிலேயே பங்கேற்க வேண்டியது. விசா பிரச்னையால் வரமுடியவில்லை. அதன் பிறகு இந்த சீசனில் கலந்து கொண்டேன். இந்த ஒற்றைப் பாடலில் 5 நபர்கள் பணியாற்றியிருக்கிறார்கள். அதிலும் முக்கிய ஆளுமையான சஞ்சய் சுப்ரமணியம் சாரும் இருக்கிறார். வாழ்க்கை என்றால் இன்பம், துன்பம் எல்லாம் கலந்ததுதான் என்பதை இந்தப் பாடலில் உணர்த்துவதுதான் எங்களின் நோக்கம். 10 வருடத்திற்கு முன்பு ஏ.ஆர்.ரஹ்மான் சார் ‘கோக் ஸ்டுடியோ’வில் ‘நான் ஏன் பிறந்தேன்’ என்ற பாடலைப் பாடியிருந்தார். அப்போதே நாமும் இதுபோல ‘கோக் ஸ்டுடியோவில்’ பங்கேற்க வேண்டும் என நினைத்தேன். 10 வருடத்திற்குப் பிறகு அது நடந்திருக்கிறது.”

NAVZ-47

‘என்னுடைய பாடல்களில் இப்படியான விஷயங்கள் உறுதியாக இருக்க வேண்டும்’ என நீங்கள் நினைக்கும் விஷயம்?

“நீங்கள் என்னுடன் பேசும் விஷயங்களை எனது பாடலில் எழுதுவேன். என்னைச் சுற்றி நிகழும் சம்பவங்கள் மீதான கவலையையும், கோபத்தையும் எனது பாடலின் மூலம் வெளிப்படுத்துவேன். இசை என்னை அனைத்திலிருந்தும் சீராக்கும். நான் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வந்த காரணத்தினால் எனக்கான அடையாளம் குறித்து ஏக்கம் எனக்கு ஏற்படும். அந்த ஏக்கத்தை என்னால் கடந்து செல்ல முடியவில்லை. தமிழ் எனக்கு எந்தளவிற்கு முக்கியமோ அதுபோல என்னுடைய பாடல்களில் பொட்டு, மூக்குத்தி போன்றவற்றை மூலம் என்னுடைய அடையாளத்தை நிலைநிறுத்த ஆசைப்படுவேன். நான் எங்குபோனாலும் என்னுடைய வீடு என்னுடனே பயணிக்கும். அதை நான் இப்போதுதான் உணரத் தொடங்கியிருக்கிறேன்.”

‘நீயே ஒளி’ பாடல் இப்போது வரைக்கும் பலருடைய ஃபேவரைட்டாக இருந்து வருகிறதே…

“அந்தப் பாடலை நான் எழுதவில்லை. ராப் பாடகர் அறிவுதான் எழுதியிருந்தார். எனக்கு முதலில் பாடுவதற்குக் கடினமாக இருந்தது. அப்போது நான் கனடாவில் இருந்தேன். அங்குதான் ரெக்கார்டிங் நடைபெற்றது. இந்தியாவிலிருந்து சந்தோஷ் நாராயணன் என்னுடன் வீடியோ கால் மூலமாகப் பேசி என்னை நிதானப்படுத்தினார். அதன் பிறகுதான் ‘நீயே ஒளி’ பாடலைப் பாட வைத்தார். சில சமயங்களில் பாடல்களைக் கேட்கும் போது ஆப்பில் தொடர்ந்து சோகப் பாடல்களாகவே வரும். அதை களைவதற்கு ‘நீயே ஒளி’ பாடலைதான் கேட்போம். அதன் பிறகு நான் புத்துணர்ச்சி கிடைத்ததுபோல உணர்வேன்.”

NAVZ-47

சினிமாவில் இன்னும் எந்த மாதிரியான பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என விரும்புகிறீர்கள்?

“சினிமாவில் இப்போது குறைவாகதான் பணியாற்றியிருக்கிறேன். இன்னும் வாய்ப்புகள் அதிகமாகக் கிடைத்தால் நானாகவே பாடல்களை எழுதுவேன். இப்போது சினிமாவில் ஹீரோக்களுக்கான அறிமுகப் பாடல்களை கடவுள்களுக்கு நிகரானவன் போல அமைத்திருப்பார்கள். ஆனால், பெண்களுக்குக் கவர்ச்சியான பாடல்களைத்தான் (Item song) தொடர்ந்து சினிமாவில் வைத்து வருகிறார்கள். இதனை மாற்றி பெண்களுக்கான என்ட்ரி பாடல்களையும் நம்பிக்கையூட்டும் விதமாக ஒரு பெண் பாடும் ராப் பாடலாக அமைக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. பெண்கள் தங்களுக்குச் சோர்வான மனநிலை ஏற்படும்போது இது போன்ற பாடல்களைக் கேட்கும்போது நம்பிக்கை பிறக்கும். எனக்கு கண்ணதாசன் சாரின் பாடல்களை அதிகளவில் பிடிக்கும். அவருடைய பாடல் வரிகளில் வாழ்க்கைகான தத்துவங்கள் நிறைந்திருக்கும். எனக்கு ஷான் ரோல்டன் சாரையும் அதிகளவில் பிடிக்கும். அவர் எங்கு போனாலும் என்னுடைய பெயரைச் சொல்வார்.”

நவீனியின் முழு பேட்டியைக் காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்!

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours