விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர், பெரிய செவலை, காமன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராம்குமார் (31). இவர், பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, “நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்து வருகிறேன். என்னுடைய தம்பி ரவிக்குமார் (29) என்பவர் கடந்த 2017-ம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் ஆயுதப்படையில் நேரடியாக தேர்ச்சி பெற்றார். தற்போது அவர், செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் குற்றப்பிரிவில் கடந்த ஓராண்டாக பணியாற்றி வருகிறார்.
கடந்த 21.2.2024-ம் தேதி இரவு 8:30 மணியளவில் என்னுடைய தம்பி வேலைக்குச் செல்ல TN 15 C 3711 என்ற பதிவு நம்பரைக் கொண்ட பைக்கில் சோழிங்கநல்லூர் கே.கே. சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே சாலையில் எதிர்திசையில் TN 14 AH 9609 என்ற பதிவு நம்பரைக் கொண்ட கார் அதிகவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் வந்தது. அந்த காரை ஒட்டியவர் எந்தவித சைகையும் செய்யாமல் ரவிக்குமாரின் பைக்மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதில், ரவிக்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அவரை பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக எனக்கு போன் வந்தது. இந்தத் தகவலையடுத்து நான் மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது என்னுடைய தம்பி ரவிக்குமாரின் வலது கால் தொடை, இடது கை முட்டியில் காயம் ஏற்பட்டிருந்தது.
விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை ஓட்டியவர் குறித்து விசாரித்தபோது, மதுமிதா (24) எனத் தெரியவந்தது. எனவே விபத்தை ஏற்படுத்திய மதுமிதாவை விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அனில்குமார் மேற்பார்வையில் எஸ்.எஸ்.ஐ திருமுருகன், ஐ.பி.சி 279, 337 ஆகிய சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகிறார். போலீஸார் நடத்திய விசாரணையில் விபத்தை ஏற்படுத்திய மதுமிதா, எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருவது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.
இது குறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து போலீஸார் கூறுகையில், “விபத்து நடந்ததும் மதுமிதா மற்றும் அவரோடு வந்தவர்களே காயமடைந்த காவலர் ரவிக்குமாரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். சிகிச்சையிலிருந்த காவலர் ரவிக்குமாரும் தற்போது டிஸ்சார்ஜாகிவிட்டார். விபத்துக்குள் சிக்கிய சொகுசு காரை பறிமுதல் செய்து பிரேக் டெஸ்ட்டுக்காக வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு அனுப்பிவைத்தோம். மேலும் காருக்குரிய ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருந்ததால், சீரியல் நடிகை மதுமிதாவிடமே காரை ஒப்படைத்து விட்டோம். மேலும், சம்பவத்தன்று அவர் மது அருந்தி காரை ஓட்டவில்லை என்பது எங்களின் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இந்த வழக்கில் நீதிமன்றம் விதிக்கும் அபராதத் தொகையை மதுமிதா செலுத்த வாய்ப்பிருக்கிறது. விபத்தில் உயிர்சேதம் ஏற்பட்டிருந்தால்தான் அதிகபட்ச தண்டனை கிடைக்கும்” என்றனர்.
+ There are no comments
Add yours