`அர்ஜுன் ரெட்டி’ படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் உருவான ‘அனிமல்’ படம் ரிலீஸானது முதலே கடும் விமர்சனங்களைச் பல தரப்பினரிடமிருந்து பெற்று வருகிறது.
இத்திரைப்படத்தில் தேவையற்ற அதீத வன்முறை மற்றும் ‘Alpha Male’ எனப்படும் அடாவடியான ஆணாதிக்கம் நிறைந்திருப்பதாகப் பலரும் விமர்சித்தனர். இப்படம் ஒருபுறம் வசூலைக் குவித்தாலும், மறுபுறம் பலரது கண்டனங்களையும், கடுமையான விமர்சனங்களையும், குறிப்பாக இளைய தலைமுறையினரின் மனதில் தவறான தாக்கத்தை ஏற்படுத்துவதாகப் பலரும் கூறிவருகின்றனர். பிரபல பலிவுட் நட்சத்திரங்கள் பலர் இப்படத்தைக் கடுமையாக விமர்சித்திருந்தனர்.
இந்த விமர்சனங்கள் குறித்துப் பேசிய ரன்பீர், “ ‘அனிமல்’ திரைப்படம் நச்சுத்தன்மை கொண்ட ஆணாதிக்கம் பற்றிய ஓர் ஆரோக்கியமான உரையாடலைத் தொடங்கி இருக்கிறது” என்றார்.
இந்நிலையில் நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு சமீபத்தில் நடந்த கருத்தரங்கு ஒன்றில், ‘அனிமல்’ படத்தைக் குறித்துக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.
இது குறித்து பேசியுள்ள அவர், “நான் இன்னும் அனிமல் திரைப்படத்தை பார்க்கவில்லை. ஆனால், தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக, திருமண வாழ்வில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமைகள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் முத்தலாக் போன்ற பல வழக்குகளை நான் பார்த்திருக்கிறேன். ‘அனிமல்’ போன்ற பெண்கள் மீதான வெறுப்பைப் பரப்பும் திரைப்படம் வசூலில் மிகப்பெரிய சாதனை செய்யும் படங்களில் ஒன்றாக மாறினால், அதை வெற்றிபெறச் செய்யும் மக்களின் மனநிலையைப் பற்றி நாம் சிந்தித்தாக வேண்டும்.
‘அர்ஜுன் ரெட்டி’ மற்றும் ‘கபீர் சிங்’ படங்களிலும் இதேபோன்ற பிரச்சினைகள் இருந்தது. இதற்கு நான் இயக்குநரைக் குறை சொல்லமாட்டேன். ஏனென்றால், அவரைப் பொறுத்தவரை வெற்றிதான் முக்கியம். ‘சமூகத்தில் என்ன நடக்கிறது என்பதை படங்களில் காட்டுகிறோம். நாங்கள் பெண்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையைப் பற்றி பேசுகிறோம்’ என்று அவர்கள் சொல்வார்கள். மக்களும் அத்தகைய படங்களை பார்க்கிறார்கள்.
என் மகள்கள் இதுபோன்ற படங்களைப் பார்ப்பதை நான் விரும்பவில்லை. ஆனால், அது எதைப் பற்றி பேசுகிறது என்பதை அறிய விரும்பிய அவர்கள் ‘அனிமல்’ படத்தை பார்த்துவிட்டு ‘அம்மா தயவு செய்து அந்த படத்தைப் பார்க்காதீர்கள்’ என்று என்னிடம் கூறினார்கள். இப்படிப்பட்ட படங்களுக்கு பார்வையாளர்களிடம் வரவேற்பு கிடைக்கும்போது ‘ நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்’ என்று அதிருப்தி தோன்றுகிறது” என்று கூறியுள்ளார்.
+ There are no comments
Add yours