சென்னை: ரன்பீர் கபூர் நடித்த ‘அனிமல்’ திரைப்படத்தை பார்க்க வேண்டாம் என தன்னுடைய மகள்கள் எச்சரித்ததாக நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமீபத்திய கருத்தரங்கு ஒன்றில் பேசிய குஷ்பு, “அனிமல் திரைப்படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. ஆனால் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக, துன்புறுத்தல்கள், துஷ்பிரயோகங்கள், திருமணத்துக்கு பின்னான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் முத்தலாக் போன்ற பல வழக்குகளை நான் பார்த்திருக்கிறேன். ‘அனிமல்’ போன்ற ஒரு பெண் வெறுப்பு திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய அளவில் வசூல் செய்யும் படங்களில் ஒன்றாக மாறினால், அதை வெற்றிபெறச் செய்யும் மக்களின் மனநிலையைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.
‘அர்ஜுன் ரெட்டி’ மற்றும் ‘கபிர் சிங்’ படங்களிலும் கூட பிரச்சினை இருந்தது. ஆனால் நான் இயக்குநரைக் குறை கூறமாட்டேன். ஏனென்றால் அவரைப் பொறுத்தவரை, வெற்றிதான் முக்கியம். “சமூகத்தில் என்ன நடக்கிறது என்பதை படங்களில் காட்டுகிறோம். நாங்கள் பெண்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை பற்றி பேசுகிறோம்” என்று சொல்வார்கள். எனினும் மக்கள் அத்தகைய படங்களை பார்க்கிறார்கள். என் மகள்கள் அதுபோன்ற படங்களைப் பார்ப்பதை நான் விரும்பவில்லை. ஆனால் அது எதைப் பற்றி பேசுகிறது என்பதை அறிய விரும்பியதால் அவர்கள் ‘அனிமல்’ படத்தை பார்த்தார்கள். அவர்கள் திரும்பி வந்து, ‘அம்மா தயவு செய்து அந்த படத்தைப் பார்க்காதீர்கள்’ என்று எச்சரித்தார்கள். இப்படிப்பட்ட படங்களுக்கு ரிப்பீட் ஆடியன்ஸ் உருவாகும்போது நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்று தோன்றுகிறது” என்றார்.
தெலுங்கு இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில், ரன்பீர் கபூர் கதாநாயகனாக நடித்த படம், ‘அனிமல்’. இதில், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல், அனில் கபூர் உட்பட பலர் நடித்துள்ளனர். திரையரங்குகளில் வெளியான இப்படம் ரூ.900 கோடி அளவில் வசூலித்தது. ஓடிடியிலும் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி இப்படம் விவாதிக்கப்பட்டது.