திரை விமர்சனம்: ரணம் | ranam movie review

Estimated read time 1 min read

சென்னையில் மாதவரம் பகுதியில் கண்டெடுக்கப்படும் ஒரு பெண்ணின் சடலத்தை அடையாளம் காண, வரைகலை தெரிந்த சிவாவை (வைபவ்) அழைக்கிறார் காவல் ஆய்வாளர் ராஜேந்திரன். சிவா வரைந்தது, ஒரு மாதத்துக்கு முன் இறந்து அடக்கம் செய்யப்பட்ட ஓர் இளம் பெண்ணின் முகத்துடன் ஒத்துப்போகிறது. இதன் தொடர்ச்சியாகப் புதைக்கப்பட்ட இளம் பெண்களின் சடலங்கள், மர்ம நபர்களால் தோண்டியெடுக்கப்பட்டு கடத்தப்பட்ட வழக்கு, சூடு பிடிக்கிறது. அதை விசாரித்து வந்த ராஜேந்திரன் திடீரென காணாமல் போக, அவரது இடத்துக்கு வருகிறார் தான்யாஹோப். சிவாவின் உதவியுடன் அந்த வழக்கின் பின்னணியில் இருப்பவர்களை அவர் கண்டுபிடித்தாரா இல்லையா என்பது கதை.

பல அடுக்குகளைக் கொண்ட த்ரில்லர் திரைக்கதைக்குள், இரண்டு பின் கதைகள் பொருத்தப்பட்ட விதம் ஈர்க்கிறது. சடலங்களை வைத்து நடைபெறும் குற்றவுலகில், இதுவரை தமிழ்சினிமாவில் பேசப்படாத, அதே நேரம்பேசப்பட வேண்டிய அவலத்தை சற்று விரிவாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பேசியிருக்கும் அறிமுக இயக்குநர் ஷெரீஃப்புக்கு நல்வரவு கூறலாம்.

காவல் துறைக்கு உதவும் நாயகன்சிவா, பின் கதையில் வரும் மருத்துவச் செவிலியர் கல்கி ஆகிய இரண்டு முதன்மைக் கதாபாத்திரங்கள் எழுதப்பட்ட விதம் நேர்த்தி. அக்கதாபாத்திரங்களுக்கு கச்சிதமாகவும் பொருத்தமாகவும் நடிப்பைக் கொடுத்திருக்கும் வைபவ், நந்திதா ஸ்வேதா இருவரும் கதையை தங்கள்தோள்களில் சுமந்திருக்கிறார்கள். காவல் ஆய்வாளராக வரும் தான்யாஹோப் காக்கி உடையில் கம்பீரமாக இருக்கிறாரே தவிர, ‘ஸ்கோப்’ இருந்தும் தட்டையான முகபாவங்களுடன் அதைக் கோட்டை விட்டிருக்கிறார். ஏனைய துணைக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ஒவ்வொருவரும் பொறுப்பைக் கச்சிதமாக நிறைவேற்றி இருக்கிறார்கள்.

பகல் காட்சிகள், இரவு நேரக் காட்சிகள், பின் கதைகள் என அனைத்திலும் தனது ஒளிப்பதிவு மூலம் கதைக் களத்துக்கு நம்மைஇழுத்துக்கொள்கிறார் பாலாஜி கே.ராஜா. அரோல் கரோலியின் பின்னணி இசை திரைக்கதையின் வேகத்துக்கும் காட்சிகள் விடுவித்துச் செல்லும் விடைகளுக்கும் ஈடுகொடுத்து ஒலிக்கிறது. முதல் பாதியில் பல இடங்களில் படத்தொகுப்பாளர் கத்தரி வைத்திருக்கலாம்.

சில இடங்களில் துருத்தி நிற்கும் தர்க்கப் பிழைகள், நாயகனையே மாதவரம் காவல் நிலையம் பெரிதும் நம்பியிருப்பது போன்ற குறைகளை மீறி, பேசப்படாத பொருளை சமூக அக்கறையுடன் பேசியிருக்கும் ‘ரணம்’ ரசிக்கத் தக்க முயற்சி.

'+k.title_ta+'

'+k.author+'