வாடகைக் கார் ஓட்டுநராக இருக்கும்கண்ணனுக்கும் (அங்கையர்கண்ணன்), மனைவியை வேலைக்கு அனுப்பிவிட்டு, அவரது வருமானத்தை வலியில்லாமல் செலவழிக்கும் சக்திக்கும் (சரவண சக்தி) மாப்பிள்ளை – தாய்மாமன் உறவு. அதைக் கூட்டணி அமைத்து நாள் முழுவதும்குடித்து கும்மாளம் அடிக்கப் பயன்படுத்துகிறார்கள். கண்ணனை நம்பிக் கரம்பற்றும் பிரணாவின் புகுந்த வீட்டுக் கனவுகள் பொசுங்கிப் போகின்றன. அவள் உணர்வுகளைச் சட்டைசெய்யாததோடு, குடியால் சாலை விபத்து ஏற்படுத்தி வழக்கு வாங்கிய பிறகும் திருந்த மறுக்கிறான். சக்தியின்குடும்பமோ அடுத்தடுத்து அவமானங்களைச் சந்தித்துக்கொண்டே இருக்கிறது. இந்த ‘க்ளாஸ்’ மேட்ஸ் திருந்தினார்களா, குடும்பத்தினருக்கு விடிவு பிறந்ததா என்பது கதை.
குடியின் தீமைகளை விளக்கி எப்போதாவது படங்கள் வருவதுண்டு. இந்தப்படம், ‘குடி’ மகன்களால் குடும்பங்கள் பொதுவெளியில் எதிர்கொள்ளும் சேதாரம் எப்படிப்பட்டது என்பதை,நகைச்சுவை தொட்டுக்கொண்டு உணர்வு குன்றாமல் சொல்லியிருக்கிறது.
தினசரி மது அருந்தினால்தான் அன்றைய நாள் நகரும் என்கிற அளவுக்கு அதற்கு அடிமையாகி இருப்பவர்களின் குடும்பங்கள் பொதுவெளியில் எவ்வாறெல்லாம் அவமானங்களைச் சந்திக்க நேரிடும், குடிநோய்க்கு ஆளானவர்களின் தீராத அனத்தல், பினாத்தல் ஆகியவற்றுடன் என்ன செய்கிறோம் என்பதே தெரியாமல் போதையில் நிதானமிழந்து செய்யும் அவச்செயல்கள் எப்படிப்பட்டவை, அவற்றைகுடும்பத்தினர் எந்த எல்லை வரைசகித்துக்கொள்வார்கள், அவமானங்களுக்குப் பிறகு குடியிலிருந்து மீள நினைத்தால் அதற்குத் தீர்வு இருக்கிறதா, இல்லையா என்பது உட்பட குடிநோயாளிகளின் உலகைஅருகிலிருந்து கவனிப்பதுபோல் ஜனரஞ்சகமாகத் திரைக்கதையை எழுதியிருக்கிறார் இயக்குநர் சரவண சக்தி.
அங்கையர்கண்ணனும் சரவணசக்தியும் குடித்துவிட்டுச் செய்யும் கூட்டணி அளப்பறைகள் எடுபடுகின்றன. ஒரு புதுமனைவிக்குரிய ஏக்கங்களை நடிப்பின் வழி நச்சென்று வெளிப்படுத்துகிறார் பிரணா ஹோம்லி. மூத்த தாய்மாமனாக வரும் மறைந்த மயில்சாமி கத்திக் கத்தி நடித்தாலும் வசன நகைச்சுவை வழியாக மனம்விட்டுச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறார். கொளுத்தும் வெயிலில் கோட் சூட்டுடன் வலம் வரும் துபாய் ரிட்டர்ன் சாம்ஸ், குடிநோய் பிரச்சினையால் அல்லல் படுகிறவர்களை ‘டீ-அடிக்ஷன்’ செய்கிறேன் பேர்வழி என்று அவர்களுடன் பழகி, பெரும் ‘குடிமக’னாக மாறிப்போவதும் அவர், டி.எம். கார்த்திக்குடன் இணைந்து செய்யும் ரகளைகளும் கூடுதல் நகைச்சுவைத் தோரணங்களாக கதையோட்டத்தில் சிதறியிருக்கின்றன. அவ்வப்போது தோன்றி, கிளைமாக்ஸில் எதிர்பாரா திருப்பத்தைக் கொண்டுவரும் ‘அயலி’ அபி நட்சத்திராவின் நடிப்பும் சிறப்பு.
குடிநோயாளிக் கணவன்களின் தொல்லைகள் பலமுறை எல்லைமீறிய பின்னும் சகித்துகொள்ளும் மனைவிகள் கதாபாத்திரம் யதார்த்தத்துக்கு முரணாக எழுதப்பட்டுள்ளது.
குடிநோய், அதற்கு அடிமையாக இருப்பவர்களுக்கு மட்டும் சேதாரத்தை உருவாக்குவதல்ல; அவர்கள் குடும்பத்தின் நிலை சமூகத்தில் என்னவாக மாறிப்போகிறது என்பதுபற்றி வெளிப்படையாகப் பாடம் எடுத்திருக்கும் இந்த ‘கிளாஸ்மேட்’ஸை கவனித்துக் கற்றுக்கொள்ளலாம்.
+ There are no comments
Add yours