கேரளத்தின் கொச்சியில் உள்ள மஞ்சுமெல் பகுதியிலிருந்து நண்பர்கள் குழு ஒன்று கொடைக்கானலுக்குச் சுற்றுலா செல்கிறது. அங்கு எதிர்பாராத விபத்து ஒன்றை அக்குழு சந்திக்கிறது. அதிலிருந்து அந்த நண்பர்கள் எப்படி மீள்கின்றனர் என்பதுதான் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ திரைப்படத்தின் ஒன்லைன்.
பல்வேறு குடும்பப் பின்னணிகளைக் கொண்ட 10-க்கும் மேற்பட்டவர்களைக் கொண்டது ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ நண்பர்கள் குழு. இவர்கள் அனைவரும் கயிறு இழுத்தல் போட்டியில் அனுபவம் கொண்டவர்கள். கோவாவுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்ற இவர்களது கனவு கரைந்துபோக கொடைக்கானலுக்குச் செல்ல முடிவு செய்கின்றனர். ஒருவழியாக டிரைவருடன் சேர்த்து 11 பேர் ஒரு குவாலிஸ் காரில் இடித்துப்பிடித்து உட்கார்ந்து கொண்டு பழநி வழியாக கொடைக்கானல் செல்கின்றனர்.
அங்குள்ள லேக், பூங்கா, பைன் மரக்காடுகள், வியூ பாய்ண்ட் என எல்லாம் சுற்றிப்பார்த்துவிட்டு அங்கிருந்து ஊருக்கு கிளம்புகின்றனர். அப்போது நண்பர்களில் ஒருவன் குணா குகையை நினைவுபடுத்த அதையும் பார்த்துவிட்டுச் செல்ல முடிவெடுக்கின்றனர். அங்கு வனத்துறை அனுமதித்த இடத்தைத் தாண்டி, தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு பயணித்து பரவசம் அடைகிறது மஞ்சுமல் பாய்ஸ் குழு. அப்போது எதிர்பாராத விதமாக இக்குழுவைச் சேர்ந்த சுபாஷ் (ஸ்ரீநாத் பாஷி) குகையின் பாறை இடுக்கில் உள்ள ஒரு 900 அடி பள்ளத்தில் விழுந்து விடுகிறார். பின்னர் என்ன நடக்கிறது என்பது படத்தின் திரைக்கதை.
இயக்குநர் சிதம்பரம் எழுதி இயக்கியிருக்கும் மலையாளத் திரைப்படம் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’. இது ஒரு உண்மைச் சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள சர்வைவல் த்ரில்லர் திரைப்படம். கொண்டாட்டமும் கும்மாளமும் நிறைந்து கிடக்கும் நண்பர்கள் பட்டாளத்தின் நட்பு, சாத்தானின் சமையலறை (Devil’s Kitchen – குணா குகையின் பழைய பெயர்) ஆழத்தைவிட ஆழமானது என நிறுவியிருக்கிறார் இயக்குநர். பத்துக்கும் மேற்பட்ட நண்பர்கள் கொண்ட குழுவுக்கு கிளைக்கதைகளை உருவாக்கி பார்வையாளர்களுக்கு அயற்சியை ஏற்படுத்தாமல் சொல்ல வந்ததை நறுக்கென சொல்லியிருக்கிறார். நிகழ்கால சம்பவத்துடன் தொடர்புப்படுத்த பயன்படுத்தப்பட்டிருக்கும் நண்பர்களின் பிஃளாஷ்பேக் காட்சிகள் உறுத்தலாக இல்லை.
படத்தின் முதல் பாதியில் நம்மை ஒரு சுற்றுலா செல்வதற்காக மகிழ்ச்சியோடு தயார்படுத்தும் இயக்குநர். இரண்டாம் பாதியில் எதிர்பாராத நேரத்தில் உருவாகும் இக்கட்டான சூழலை எதிர்கொள்ள தேவையான மன உறுதியைக் கற்றுத் தந்திருக்கிறார். படத்தில் பணியாற்றிய பலரும் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர். ஸ்ரீநாத் பாஷி, சவுபின் ஷகிர் இருவரும் மீண்டும் ஒருமுறை தங்களது நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். சைஜு காலித்தின் கேமிராவும் அஜயன் சலிஷேரியின் கலை இயக்கமும் பிரமிக்கச் செய்கிறது. எது உண்மையான குகை எது செட் என தெரியாத அளவுக்கு இருவரும் உழைத்திருக்கின்றனர்.
சஷின் ஷியாமின் பின்னணி இசையும் விவேக் ஹர்ஷனின் கட்ஸும் படத்தை விறுவிறுப்பாக்குகின்றன. தமிழில் சந்தானபாரதி இயக்கத்தில் கமல் நடித்த குணா திரைப்படக் குழுவினருக்கு நன்றி என்ற கார்டு உடன் தான் இந்தப்படமே தொடங்குகிறது. குறிப்பாக இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது. கண்மணி அன்போடு காதலன் பாடல்தான் டைட்டில் கார்டில் வருகிறது. படத்தின் முக்கியமான ஒரு இடத்தில் இந்தப்பாட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதி வரும், அது படம் பார்க்கும் அனைவருக்கும் கூஸ்பம்ப்ஸைத் தருகிறது.
ஜோ படத்தில் இடம்பெற்றுள்ள ‘உருகி உருகி போனதடி’ பாடலும், “எண்ணமே என் உன்னால” என்ற கட்சி சேர எனும் ஆல்பம் பாடல் ஒன்றும்தான் இன்றைக்கு டிரெண்டில் இருக்குற காதல் பாடல்கள். இன்ஸ்டா, ஸ்பாட்டிஃபை, முகநூல் என எங்குபார்த்தாலும் இந்தப் பாடல்களைக் கேட்காமல் இருக்க முடியாது. இதேபோல் டேப் ரிக்கார்டர் காலத்தில் எங்கு பார்த்தாலும் கேட்ட பல பாடல்கள், இன்றும் பலரது இன்ஸ்டா ரீல்ஸ்களின் வழியே உயிர் பிழைத்துக் கிடக்கிறது. அந்தப்பட்டியலில் குணா திரைப்படத்தில் வந்த “கண்மணி அன்போடு காதலன்” பாடல் நிச்சயம் இருக்கும்.
இப்பாடல் காலத்தைக் கடந்து பலரது மனங்களில் நங்கூரமிட்டதில் கமல்ஹாசன் – இளையராஜாவுக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. இந்தப் படத்தின் கம்போசிங்கின் போது, காதலிக்கு காதலன் கடிதம் எழுதும் சிச்சுவேஷனுக்கு “அன்பே அன்பே நலம்தானா…… அங்கே அங்கே சுகம்தானா” என்று இளையராஜா மெட்டமைத்திருப்பார். கதைப்படி குணா மனநலபிறழ்வு கொண்டவர். அவரது அணுகுமுறை இயல்பான வடிவில் இருக்கமுடியாது. மனதில் நினைப்பதை அப்படியே சொல்ற மாதிரி ஒரு பாட்டு வேண்டும் என்ற கமலின் வேண்டுகோளை ஏற்று உருவாக்கப்பட்ட பாடல்தான் கண்மணி அன்போடு காதலன் பாடல்.
மனிதர் உணர்ந்துகொள்ள இது மனித காதல் அல்ல… அதையும் தாண்டி புனிதமானது! என்று இந்தப் பாட்டில் வரும் இவ்வரிகள்தான் அந்தப்படத்தின் ஒட்டுமொத்த கதையின் அடிநாதம். அதுவும் கமல் அந்த ‘அதையும்’ என்ற வார்த்தையை உச்சரிக்கும் ஓசையின் அளவில் நாயகி மீதான தனது காதலை பாடலைக் கேட்கும் ஒவ்வொருவரின் மனங்களிலும் வேரூன்றிடச் செய்திருப்பார். சினிமா என்பது ஒலியும் ஒளியும் என்பதை நன்கு அறிந்தவர் கமல். பாடல் உருவாக்கத்தில் அவர் மேற்கொண்ட சிரத்தைப் போலவே, பாடலுக்கான லொகேசனையும் தேர்ந்தெடுத்திருப்பார். அதனால்தான் 23 வருடங்கள் கழித்து அந்தப் பாடலைக் கேட்கும்போது அகமும் புறமும் ஈரம் கொள்கிறது.
மர்மங்களை மவுனித்துக் கொண்ட மலைப்பிரதேசத்தின் குகை ஒன்றில் இந்தப்பாடல் எடுக்கப்பட்டிருக்கும். பறவைகளின் கீச்சொலியும், பாறைகளின் இறுக்கமும், குகைகளின் இருன்மையும், அசைவற்றுக் கிடக்கும் மரங்களும், கிளைகளும், பாறைகளில் படிந்துக்கிடக்கும் பாசி போல அந்தப் பாடலும், அதில் வரும் வசனங்களும் காட்சிகளும் இன்றளவும் நம் நினைவுகளில் அப்பிக்கிடக்கிறது. இத்தகைய தாக்கத்தின் நீட்சியான இயக்குநர் சிதம்பரத்தின் இந்த ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ திரைப்படம் பார்வையாளர்களுக்கு நல்லவொரு திரையனுபவத்தைக் கொடுக்கிறது.