கூட்டாளிகளாகக் கடத்தல் தொழிலில் இறங்கிய மூவர் கருத்துவேறுபாட்டால் பிரிந்து வெவ்வேறு திசைகளில் வெவ்வேறு முறையான கடத்தல்களில் கொடிகட்டிப் பறக்கிறார்கள். இந்த மூன்று பேருக்கும் நடுவில் ஒரு மேஜிக் நிபுணர் புகுந்து கல்லா கட்ட நினைத்தால் என்ன ஆகும் என்பதே `வித்தைக்காரன்’ கதை.
ஓப்பனிங் சாங், மாஸ் பி.ஜி.எம், லவ் சாங் என முழுநேர நாயகனாக சதீஷ். அனைத்திலுமே தட்டுத்தடுமாறிக் கரை சேர்கிறார். இன்னும் நிறையப் பயிற்சி வேண்டும் பாஸ்! மாஸ்டர்மைண்டாக அவரை காட்டுவதற்கான இயக்குநரின் முயற்சி வெகு சுமாரான திரைக்கதையால் வீணாகப் போயிருக்கிறது. இவர் இல்லாமல் ஆனந்தராஜ், மதுசூதனன், ஜான் விஜய், சாம்ஸ், ஜப்பான் குமார், பவெல் நவகீதன், மாரிமுத்து, சுப்ரமணியம் சிவா எனப் பரிச்சயமான முகங்கள் பலரும் படத்தில் அட்டெண்டன்ஸ் போடுகிறார்கள். ஆனால், அதைத் தாண்டி சொல்லிக்கொள்ளும்படியான தாக்கத்தை யாருமே ஏற்படுத்தவில்லை.
ஆனந்தராஜ் டெம்ப்ளேட் காமெடிகளுமே சில இடங்களில் மட்டும்தான் சிரிக்க வைக்கின்றன. மற்றவர்கள் செய்யும் காமெடிகள் அதைவிட மேலே போய் நம் சகிப்புத்தன்மையைச் சோதிக்கின்றன. புலனாய்வு பத்திரிகையாளராகத் தனி மாஸ் என்ட்ரி சீனெல்லாம் இருந்தும் நாயகி சிம்ரன் குப்தாவும் சுமாரான எழுதப்பட்ட கதாபாத்திரங்களில் ஒன்றாக வந்துபோகிறார். அவ்வளவே!
ட்விஸ்ட்களை ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கி சுவாரஸ்ய கடத்தல் + காமெடி படத்தை முயற்சி செய்திருக்கிறார் அறிமுக இயக்குநர் வெங்கி. ஐடியாக்களாக சில விஷயங்கள் சுவாரஸ்யமாக இருந்தாலும் அவை காட்சிகளாக விரியும்போது எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் போவது சோகம்.
அருள் இளங்கோ சித்தார்த்தின் ஸ்டைலிஷ் எடிட்டிங் ஆங்காங்கே ஒர்க்அவுட்டானாலும் சில இடங்களில் எடுபடாமல் காட்சியைச் சிதைத்துவிடுகிறது. யுவ கார்த்திக்கின் ஒளிப்பதிவு ஓகே ரகம். VBR-ன் பாடல்களும் இசையும் படத்திற்கு எந்த விதத்திலும் பலம் சேர்க்கவில்லை. அதனால், மேக்கிங்கில் ஜஸ்ட் பாஸ்ஸே வாங்குகிறது படம்!
‘மாயாஜாலக்காரன்’ என்று நாயகன் அறிமுகப்படுத்தப்பட்டாலும் அதை வைத்து சுவாரஸ்யமாக அவர் எதுவுமே செய்யவில்லை. பெரும் பில்ட்-அப்புடன் அறிமுகமாகும் மூன்று வில்லன்களும் காமெடி ஏரியாவிலேயே கபடி ஆடுவதால் எந்தக் காட்சியிலுமே நாயகனுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவே நமக்குத் தோன்றவில்லை. அதெல்லாம் சீரியஸ் கதைக்குத்தானே வேண்டும் என காமெடி ரூட் எடுத்திருக்கிறார் இயக்குநர். ஆனால், அந்த காமெடியுமே வெறும் கடி ஜோக்களின் தொகுப்பாக நம்மைக் கடுப்பேற்றவே செய்கிறது.
இரண்டாம் பாதியில் பெரும் பகுதி விமான நிலையத்தில் நடக்கிறது. ஒரு விறுவிறு ஹெய்ஸ்ட்டுக்கான சிறப்பான களம். அதையும் பயன்படுத்திக் கொள்ளாமல் சொதப்பியிருக்கிறார்கள். லாஜிக் மீறல்கள் எனத் தனியாகப் பட்டியலிடும் அளவுக்கு ஏகப்பட்ட ஓட்டைகள் வேறு வரிசைக்கட்டி நிற்கின்றன. படத்தின் இறுதிக்காட்சியில்தான் அத்தனை முடிச்சுகளையும் அவிழ்க்கிறார்கள். ‘நைட் ஃபுல்லா இததான் ஒட்ட வச்சிட்டு இருந்தீர்களா?’ என நம்மால் கேட்காமலும் இருக்க முடியவில்லை.
மொத்தத்தில், `லாஜிக் இல்லாத மேஜிக்’ எனச் சொல்லும் அளவுக்குக் கூட எதையும் செய்யாமல் ஏமாற்றுகிறான் இந்த `வித்தைக்காரன்’.
+ There are no comments
Add yours