தன் காதல் மனைவியை விபத்தில் இழந்து, அந்த விபத்தால் மூளையின் உட்பகுதியில் காயமும் ஏற்படவே, அதனால் அடிக்கடி தன்னிலை மறக்கும் பிரச்னையால் அவதிப்படுகிறார் சிவா (வைபவ்). சிதைந்த சடலங்களுக்கான முகம் வரையும் ‘முக மீட்டுருவாக்க வரை கலைஞராக’வும், மாதவரம் காவல்நிலையத்திற்கு ‘க்ரைம் ஸ்டோரி’ எழுதித்தருபவராகவும் இருக்கிறார். இந்நிலையில், பாதி எரிந்த நிலையில் இருக்கும் மனித உடற்பாகங்களை தனித்தனியே அட்டைப் பெட்டிகளில் வைத்து, சென்னையின் மூன்று முக்கியமான இடங்களில் சாலையில் போட்டுச் செல்கிறார் ஒரு மர்ம நபர்.
இந்தப் பாகங்கள் யாருடையது, அந்த மர்ம நபர் யார் போன்ற கேள்விக்கு விடை காணக் காவல் ஆய்வாளரான தான்யா ஹோப்புடன் களமிறங்குகிறார் வைபவ். இறுதியில், தன் நோயின் துயரத்தையும் மீறி, குற்றவாளியையும் அக்கொலைகளுக்கான காரணத்தையும் அவர் கண்டுப்பிடுத்தாரா, இல்லையா என்பதைப் பேசுகிறது அறிமுக இயக்குநர் செரிஃபின் `ரணம் – அறம் தவறேல்’ திரைப்படம்.
காதல் மனைவியை இழந்த வேதனை, தனக்கு இருக்கும் உடல்ரீதியான பிரச்னை, சடலத்திற்கு முகம் வரைவது, கொலை வழக்குகளைத் துப்பறிவது போன்ற வேலைகள் தரும் இறுக்கம் என அழுத்தமான கதாபாத்திரத்தை அசால்ட்டாக அணுகி, அக்கதாபாத்திரத்தையே கவிழ்த்துப் போட்டிருக்கிறார் வைபவ். ஒரு பெரிய வழக்கை விசாரிக்க வரும் காவல்துறை ஆய்வாளராக தான்யா ஹோப், அக்கதாபாத்திரத்திற்கான எந்தச் சிரத்தையும் எடுக்காமல், ஒப்பேற்றி இருக்கிறார். அதிரடி முடிவுகள், ஆக்ஷன், பரபரப்பு என எல்லாவற்றிலும் ஒரே முகபாவனை. தன் மகளுக்காக உருகும் தாயாக நந்திதா ஸ்வேதா கொஞ்சம் மனதில் நிற்கிறார். கிச்சா ரவி, சுரேஷ் சக்ரவர்த்தி, பத்மன் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள்.
சிதைந்த சடலத்திற்கு முகம் வரைவது, க்ரைம் ஸ்டோரி எழுதுவது எனச் சுவாரஸ்யமாகவே தொடங்குகிறது திரைக்கதை. ஆனாலும், சில நிமிடங்களிலேயே `யூ-டர்ன்’ போட்டு, காதல் காட்சிகள், காதல் பாடல், பார் ஃபைட் எனச் சோதிக்கத் தொடங்குகிறது படம். சிறிது நேரத்திலேயே மீண்டும் `யூ-டர்ன்’ அடித்து, பயங்கரமான க்ரைமிற்குள் தலையை நுழைக்கிறது திரைக்கதை.
காக்கி சீருடையைத் துவைத்து, காய வைத்து, அயன் செய்து மாட்டிக்கொண்டு, காவல் ஆய்வாளர் தான்யா உட்பட அத்தனை போலீஸ் அங்கே இருந்தாலும், எல்லா விசாரணைகளையும் அவதானிப்புகளையும் கண்டுபிடிப்புகளையும் கதாநாயகனே களமிறங்கிச் செய்வதில் கொஞ்சம் கூட லாஜிக் இல்லை. ஆனாலும், நிதானமாக நகர்ந்து, ஆங்காங்கே திருப்பங்களையும் சுவாரஸ்யங்களையும் தந்து, இரண்டாம் பாதிக்கு ஓரளவிற்கு நம்பிக்கையையும், லீடையும் தருகிறது முதற்பாதி.
காவல்துறை விசாரணை, உண்மையான குற்றவாளி, அக்குற்றவாளியின் பின்கதை, பாதிக்கப்பட்டவர்களின் பின்கதை, பின்கதையில் பாடல்கள், பழிவாங்கும் படலம், கதாநாயகனின் சாகசங்கள், கதாநாயகனின் பின்கதை என அடுக்கடுக்கான திரைக்கதை லேயர்கள் எந்த நிதானமும் இல்லாமல் ‘ரயிலுக்கு நேரமாச்சு’ என்பது போல வேகவேகமாக ஓடிக்கொண்டே இருக்கின்றன. அம்மா – மகள் பாசம், ஆஸ்பத்திரியில் நடக்கும் அக்கிரமங்கள், நெக்ரோபீலியா (Necrophilia) என்ற நோயால் பாதிக்கப்பட்டு சடலங்களுடன் உடலுறவு கொள்ளும் கதாபாத்திரங்கள் எனப் பல முக்கியமான விஷயங்களைத் திரைக்கதை கொண்டிருந்தாலும், அவை ‘டிராமாவாக’ சொல்லப்படாமல் வாய்ஸ் ஓவர்களாகவும், ‘சித்திரிக்கப்பட்ட காட்சிகள்’ போலவும் காட்டப்பட்டு ‘ஓடிக்கொண்டே’ இருக்கிறது படம். இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு?!
ஒரு க்ரைம் திரில்லர் படத்திற்குத் தேவையான பங்களிப்பை ஓரளவிற்குத் தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பாலாஜி.கே.ராஜா. இரவு நேரச் சண்டைக்காட்சிகளுக்கு ஒளியால் சற்றே புதுமை புகுத்த முயன்றிருக்கிறார். எக்கச்சக்க லேயர்களைக் கொண்டு ‘உசைன் போல்ட்டைப் போல் நில்லாமல் ஓடும்’ இரண்டாம் பாதியில் படத்தொகுப்பாளர் முனீஸ் கொஞ்சமாவது நிதானத்தைக் கடைப்பிடித்திருக்கலாம். அரோள் கரோலி இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கவில்லை. பின்னணி இசையால் சில பரபர காட்சிகளுக்கு மட்டும் வலுசேர்த்திருக்கிறார்.
லாஜிக் ஓட்டைகள், மேலோட்டமான காட்சிகள், நம்பகத்தன்மையே இல்லாத திருப்பங்கள் என இரண்டாம் பாதி அயற்சியை மட்டுமே பார்வையாளர்களுக்குக் கடத்துகிறது. குற்றங்களை வாய்ஸ் ஓவர்களில் விளக்கும் செய்தித் தொலைக்காட்சிகளின் ஆவண நிகழ்ச்சியைப் பார்த்த அனுபவத்தைத்தான் பார்வையாளர்களுக்குக் கடத்துகிறது படம்.
“உண்மை தனக்கான நீதியைத் தானே தேடிக்கொள்ளும்” என்று ஒரு வசனத்தைக் கதாநாயகன் பேசுகிறார். அதேபோல, “ஒரு படம் தனக்கான திரைக்கதையைத் தானே தேடிக்கொள்ளும்” என்று இயக்குநர் கருதி விட்டாரோ என்று எண்ண வைக்கிறது, இந்த `ஹை பட்ஜெட்’ சித்திரிக்கப்பட்ட காட்சித் தொகுப்பான `ரணம் அறம் தவறேல்’ திரைப்படம்.
+ There are no comments
Add yours