Thalapathy 69: விஜய்யின் கடைசி படத்தை இயக்குவது யார்? முன்னணியில் உள்ள இயக்குநர்கள் இவர்கள்தான்!

Estimated read time 1 min read

விஜய்யின் முழுநேர அரசியல் என்ட்ரிக்கு முன்னதாக அவரின் கடைசி படமான `தளபதி 69′ படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார், கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார் எனச் சொல்லி வந்த நிலையில் இப்போது டோலிவுட் இயக்குநர் திரிவிக்ரம் இயக்குகிறார் என்ற தகவலும் பரவி வருகிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் இப்போது ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் விஜய். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கியவர், “நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன்” என்று தெரிவித்திருந்தார்.

விஜய் | Vijay

இது அவரது 69வது படம் என்பதாலும் இந்தப் படத்திற்குப் பின் சினிமாவை விட்டு விலகுகிறார் என்பதாலும் ரொம்பவே எதிர்பார்ப்பிற்குரிய படமாகி இருக்கிறது. இந்நிலையில் விஜய்யிடம் சில ஆண்டுகளுக்கு முன்னரே கதைகள் சொன்ன வெற்றிமாறன், கார்த்திக் சுப்புராஜ் ஆகியோரது பெயர்கள் சொல்லப்பட்டு வருகின்றன. விஜய்யை வைத்து சமீபத்தில் படங்கள் கொடுத்த அட்லியும் இயக்கலாம் என்றும் சொல்லி வருகிறார்கள்.

இப்படி ஒரு சூழலில் இப்போது ‘தளபதி 69’ படத்தை இயக்கப் போவது யாரென பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ‘ஜில்லா’ படத்தின் இயக்குநர் நேசன், சில வருடங்களுக்கு முன் விஜய்யிடம் ஒரு ஒன்லைன் சொல்லியிருக்கிறார். ஆனாலும் அதன்பிறகு அவர் படங்கள் எதுவும் இயக்கவில்லை.

வெற்றிமாறன்

தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி தனது சூப்பர்குட் ஃபிலிம்ஸின் 100வது படமாக விஜய் படம்தான் இருக்க வேண்டும் என விரும்பி வருகிறார். அதைத் தெலுங்கு பட இயக்குநர் கோபிசந்த் மாலினேனி இயக்குவார் எனவும் தகவல்கள் தந்தி அடித்தன. இதற்கிடையே தேனாண்டாள் ஃபிலிம்ஸிற்கு விஜய் ஒரு படம் நடித்துக் கொடுப்பார் எனவும் சொல்லப்பட்டு வந்தது. ஆனால் இதற்கெல்லாம் இனி வாய்ப்பில்லை என்றும் சொல்கிறார்கள்.

இதற்கிடையே இப்போது தெலுங்கில் சமீபத்தில் ‘அலாவைகுண்டபுரம்லோ’, ‘குண்டூர் காரம்’ படங்களை இயக்கிய திரிவிக்ரம் ஶ்ரீனிவாஸ் ‘தளபதி 69’ படத்தை இயக்கலாம் எனத் தகவல் பரவி வருகிறது. இதுவும் உண்மையில்லை என்கிறார்கள். திரிவிக்ரமின் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்த ‘குண்டூர் காரம்’ அங்கே பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷனை அள்ளவில்லை. மகேஷ் பாபுவிற்குச் சறுக்கலைக் கொடுத்த படம் என்பதால், அவர் இயக்கத்தில் விஜய் நடிக்க வாய்ப்பில்லை என்கிறார்கள்.

திரிவிக்ரம் ஶ்ரீனிவாஸ் | Trivikram Srinivas

கார்த்திக் சுப்புராஜ் அடுத்து விக்ரமை வைத்து ‘மகான் 2’வை இயக்கவும் வாய்ப்பிருக்கிறது. விக்ரமிற்கு மிகவும் பிடித்த படமாக ‘மகான்’ இருப்பதால், ‘மகான் 2’வை பண்ண விரும்புகிறார் என்றும் சொல்கிறார்கள்.

இந்நிலையில், விஜய்யின் அரசியல் பிரவேசத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக நல்ல கதை அம்சத்தோடு, விஜய்யின் இமேஜையும் உயர்த்தும் படமாக `தளபதி 69’யை கொடுக்க வேண்டும் என விஜய் நினைக்கிறார். இதற்கான சரியான இயக்குநர் ஷங்கர்தான் என விஜய்யிடம் அவரது நலம் விரும்பிகள், நண்பர்கள் சொல்லி வருகின்றனர்.

‘ஜென்டில்மேன்’, ‘அந்நியன்’, ‘இந்தியன்’ என ஷங்கர் இதற்கு முன் இயக்கிய படங்களில் மாஸுக்கு மாஸ், ஜனங்களின் பிரச்னைகளை சொல்வதில் கிளாஸுக்கு கிளாஸ் என்பதாலும், விஜய் ஏற்கெனவே ஷங்கரின் இயக்கத்தில் நடித்த ‘நண்பன்’ வெற்றியடைந்த படம் என்பதாலும், ஷங்கர் இயக்கினால் சரியான சாய்ஸாக இருக்கும் என்கிறார்கள்.

ஷங்கர் – கார்த்திக் சுப்புராஜ்

ஷங்கரும் இப்போது ‘கேம் சேஞ்சர்’, ‘இந்தியன் 2’, ‘இந்தியன் 3’ படத்தினை முடிக்கும் தறுவாயில் உள்ளதால், அவர் விஜய்யை இயக்கினாலும் ஆச்சரியமில்லை என்றும் சொல்கிறார்கள்.

ஆனாலும் விஜய்யிடம் இன்னும் பலரும் கதை சொல்லி வருகின்றனர். இதுகுறித்த மீட்டிங்குகள் தினமும் விஜய்யின் அலுவலகத்தில் நடந்து வருகின்றன என்கிறார்கள். இன்னமும் இயக்குநர் யாரும் முடிவாகாத சூழல்தான் தற்போதைய நிலவரம்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours