எஸ்.ஜே.சூர்யாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு
21 பிப், 2024 – 15:12 IST
ஒரு காலத்தில் குறிப்பிடத்தக்க இயக்குனராக இருந்த எஸ்.ஜே.சூர்யா தற்போது பிசியான நடிகர் ஆகிவிட்டார். தமிழ், தெலுங்கு படங்களில் வில்லன், குணசித்ரம், ஹீரோ என ஒரு டஜன் படங்களுக்கு மேல் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. தனக்கு வைரஸ் காய்ச்சல் வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாபி சிம்ஹா, மேத்யூ வர்கீஸ் மற்றும் வேதிகா நடித்துள்ள படம் ‘ரஸாக்கர். யாத சத்ய நாராயணா இயக்கி உள்ளார். 1948-ம் ஆண்டில் நடந்த ஐதராபாத் விடுதலை போராட்ட பின்னணியில் இப்படம் உருவாகி உள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தியில் வெளியாகிறது.
இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று நடந்தது. எஸ்.ஜே.சூர்யா சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. நிகழ்ச்சியில் பங்கேற்ற பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யாவுக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டிருக்கும் தகவலை வெளியிட்டார்.
இதை தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யாவும் தனது எக்ஸ் தளத்தில் இதனை தெரிவித்துள்ளார். “வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், என்னால் நிகழ்ச்சியில் பங்கேற்க வரமுடியவில்லை. இதற்காக நான் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். மன்னித்து கொள் தம்பி(பாபி சிம்ஹா). டிரைலர் வெளியீட்டுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதுடன், ரஸாக்கர் படம் பெரிய வெற்றியை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் பட குழுவினருக்கும் எனது வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.
+ There are no comments
Add yours