‘HIT 1st Case’, ‘HIT 2nd Case’ ஆகிய படங்களுக்குப் பிறகு, சைலேஷ் கொலனு இயக்கிய படம் இது. அந்த இரண்டு படங்களை தூக்கி நிறுத்தியது திரைக்கதை தான். அது இதில் மிஸ்ஸிங் ! அதனால், வழக்கமான ஆக்ஷன் படமாகவே ‘சைந்தவ்’ மாறியிருக்கிறது. ஆக்ஷன் டிராமாவை கையிலெடுத்த சைலேஷ், அதற்கு இன்னும் கொஞ்சம் நியாயம் செய்திருக்கலாம். பெரிய பெரிய வசனங்கள், அசாத்திய ஃபைட்டுகள் என இல்லாமல் முடிந்தவரை அதை இயல்பாக எடுத்து வந்தது பாராட்டுக்குரியது. ‘நான் அமைதியா இருக்கும்போதே சத்தம் கேட்கும்டா’ என்றதும் அனைவரின் இதயத்துடிப்பு சத்தம் கேட்பது, ‘எல்லா சட்டையிலும் காலர் இருக்கும். அந்தக் காலர் யார் கழுத்துல இருக்கிறதுனு வெச்சுதான் மரியாதையே’, ‘என் தலையை எடுக்கணும்னா அதுக்கு முதல்ல நீ தலையோட இருக்கணும்’ போன்ற ட்ரேட்மார்க் டோலிவுட் வசனங்களும் இல்லாமல் இல்லை. .
இரவில் நடக்கும் காட்சிகளில் மணிகண்டனின் ஒளிப்பதிவுக்காக செய்திருக்கும் மெனக்கெடல் வெளிப்படுகிறது. பரபர ஆக்ஷன் காட்சிகளை அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார். கேரியின் எடிட்டிங் படத்திற்கு பேருதவி செய்திருக்கிறது. எமோஷன் காட்சிகளைக் கடத்த இவர் கொடுத்த இடமும் ஸ்டன்ட் காட்சிகளை சுருக்கிக் காட்டிய விதமும் ப்ளஸ்! சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்கள் பெரிதாகச் சோபிக்கவில்லை. கதையோட்டத்திற்கு பின்னணி இசை உதவியிருக்கிறது அவ்வளவே ! ச.நா சைந்தவாக இல்லாமல் சைகொவாக மாறி இசையமைத்திருந்தால் அனல் பறந்திருக்கும்.
+ There are no comments
Add yours