குண்டூரில் மிளகாய் மண்டி வைத்திருக்கும் சத்யத்தின் (ஜெயராம்) மகன் வெங்கட ரமணா (மகேஷ் பாபு). ஒருவரை வெட்டிய குற்றத்திற்காக ஜெயிலுக்கு செல்கிறார் ஜெயராம்.
அதனால், கோவப்பட்டு தன் மகனையும் கணவர் குடும்பத்தையும் விட்டு தன் அப்பா வீட்டுக்கே செல்கிறார் வசுந்தரா (ரம்யா கிருஷ்ணன்). தன் மகள் வசுந்தராவுக்கு இன்னொரு திருமணத்தை நடத்தி வைத்தது மட்டுமல்லாமல் அரசியலில் நிற்க வைத்து அமைச்சராக்குகிறார், வெங்கட சுவாமி (பிரகாஷ் ராஜ்). அமைச்சாரான அம்மாவுக்கும் அப்பாவுடன் குண்டூரில் வாழும் மகனுக்குமான கதையே ‘குண்டூர் காரம்’. இதை ஆக்ஷன், மாஸ், மசாலா, எமோஷன் என அனைத்தையும் டபுள் லேயரில் போட்டு காரசாரமாக கொடுத்து நம் கண்களில் கண்ணீர் ததும்பி நிற்க வைக்க (எமோஷனில் இல்லை. காரத்தில் ) முயற்சித்திருக்கிறார், இயக்குநர் த்ரிவிக்ரம் ஶ்ரீநிவாஸ்.
மகேஷ் பாபுவுக்கு வழக்கமான மாஸ் கதாபாத்திரம். இந்த முறை கிராமத்தில். ஆனால், என்னவோ எலைட்டாகவே இருக்கிறார். மாஸ், ஸ்லோ மோஷன் வாக், பன்ச் டயலாக்குகள், ஃபைட் என த்ரிவிக்ரம் பட நாயகனுக்குக்கான அத்தனையும் இருக்கிறது. அப்போ என் தலைவன் என்ன கொங்குரா சட்னியா ? என்று மகேஷ் பாபு ரசிகர்கள் கோவப்பட வேண்டாம். இவை அனைத்தும் மகேஷுக்குமானதுதான். மிளகாய் குவியல்கள், சிவப்பு நிற கார் என மகேஷ் பாபுவைச் சுற்றி எல்லாமே சிவப்புதான். மிளகாய் பொடிக்கு மத்தியில் வைத்த வெண்ணிலா ஐஸ்க்ரீம் போல திரையில் சில்லென்று எரிகிறார்.
ஸ்டைல், மாஸ், ரொமான்ஸ் எல்லாம் சூப்பர். எமோஷன் காட்சிகளில் கண்ணீர் முட்டி நிற்பதாலும் பின்னணி இசையாலும்தான் அது எமோஷன் என்று தெரிகிறது. ஆனால், இது வழக்கமானது தான் என்பதால், கடந்துவிடலாம். மற்ற படங்களில் இல்லாத ஒரு விஷயம் இதில் மகேஷ் பாபுவிடம் இருந்தது சூப்பரான நடனம். இறங்கி ஆடியிருக்கிறார்.
திரையில் அழகுப் பதுமையாக ஶ்ரீலீலா ஜொலிக்கிறார். நடிப்பு, நடனம் என தனக்கு கொடுக்கப்பட்டதை செவ்வென செய்திருக்கிறார். டான்ஸிங் குயினாக இருக்கும் இவருக்கு, டான்ஸ் ஆடுவதற்கேற்ப சில காட்சிகளை எழுதியிருக்கிறார்கள். அவையெல்லாம் சூப்பராக வொர்க்காகி இருக்கிறது. ‘குறிச்சி மாடத்தபெட்டி’ பாடலில் இவரது நடனமும் எனர்ஜியும் வேற லெவல் ! `என் கரியர் முழுக்க ஆடினாலும் உனக்கு ஈடு கொடுக்கமுடியாது!’ என்ற வசனமே படத்தில் இருக்கிறது. அது உண்மைதான்! இன்னொரு நாயகி மீனாட்சி செளத்ரி. பெரிய அளவில் ஸ்கோப்பில்லை. மகேஷ் பாபுவின் அத்தை மகளாக வருகிறார், அவ்வளவே !
தாத்தாவாக பிரகாஷ் ராஜ். இவருக்கும் மகேஷ்பாபுவுக்கான காட்சிகள்தான் பெரும்பாலும் இருக்கின்றன. தனக்கான ஜோனில் பிரகாஷ் ராஜ் விளையாடியிருந்தாலும் கதாபாத்திரமாக இன்னும் அழுத்தமாக எழுதப்பட்டிருக்கலாம். ஜெயராமும் ரம்யா கிருஷ்ணனும் படம் முழுக்க வந்தாலும் ஓரிரு எமோஷன் காட்சிகள்தான் அவர்களுக்கான களமாக அமைந்திருக்கிறது. தவிர, ஈஸ்வரி ராவ், ஜெகபதி பாபு, சுனில், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா, வெண்ணிலா கிஷோர், ராகுல் ரவீந்திரன் என டஜன் கணக்கில் நடிகர்கள் திரைக்குள் இருக்கிறார்கள்.
பெரிய வீடு, பெரிய குடும்பம், பணக்கார வீட்டில் பிறந்த ஹீரோ மிடில் கிளாஸ் வாழ்க்கை வாழ்வான், ரிவெஞ்ச், குடும்ப பாசம், லவ், காமெடி, மாஸ் ஆக்ஷன் என இயக்குநர் த்ரிவிக்ரம் ஶ்ரீநிவாஸின் படங்கள் அனைத்தும் பக்கா டோலிவுட் படங்களுக்கான இலக்கணமாக இருந்திருக்கின்றன. அந்த வரிசையில் ‘குண்டூர் காரம்’ படமும் இணையாமல் இல்லை. ஓர் இயக்குநருக்கு சிக்னேச்சர் இருக்கலாம். சிக்னேச்சர் மட்டும் இருந்தால் எப்படி த்ரிவிக்ரம் காரு? ஆம். சமீபமா அவருடைய ‘அலா வைகுந்தபுரமுலோ’ படத்தையே எடுத்துகொள்ளலாம். அல்லு அர்ஜுன் – மகேஷ் பாபு, தபு – ரம்யா கிருஷ்ணன், சமுத்திரக்கனி – பிரகாஷ் ராஜ், பூஜா ஹெக்டே – ஶ்ரீலீலா, நிவேதா பெத்துராஜ் – மீனாட்சி செளத்ரி, ஜெயராம் – ஜெயராம். அங்கு பிஸினஸ் இங்கு அரசியல். கதையில் சின்ன சின்ன மாற்றங்கள் இதுதான் ‘குண்டூர் காரம்’.
ஹீரோவுக்கான மாஸும் பில்டப்பும் அதற்காக அவர் எழுதும் வசனங்களும் க்ளாப் அடிக்க வைக்கின்றன. அதே சமயம், சில பல இடங்களில் போர் அடிக்கவும் செய்கின்றன. அஜய், அஜய் கோஷ் வரும் காட்சிகளில் ஹியூமர் நன்றாக வொர்க்காகி இருக்கின்றன. ஒரு சீன் கூட வாவ் சொல்ல வைக்கவில்லை என்பது வருத்தம். போர்ட் ரூம் சீன், சேவலை வைத்து ஸ்டன்ட், எமோஷன் காட்சிகள் என ‘அலா வைகுந்தபுரமுலோ’வில் நடந்தது மேஜிக். அந்த மேஜிக் இங்கு கொஞ்சமும் நிகழவில்லை.
‘குண்டூர் காரம்’ – ‘Highly Inflammable’ என்ற டேக் லைனுடன் தான் டைட்டில் வருகிறது. அதற்கு நியாயம் சேர்க்காமல் விட்டிருக்கிறார்கள். படத்தைத் தூக்கி நிறுத்த தமன் எவ்வளவோ முயன்றியிருக்கிறார். ‘குழாய் அடியில் விழுந்து என்ன செய்வது ? கோயில் அடியில விழணும்’ என்பது போல சூப்பரான கதை, திரைக்கதை இருந்தால் எங்கேயோ போயிருக்கும். ‘தம் மசாலா… பிரியாணி, எர்ரா காரம்… அரகோடி, நிம்ம சோடா… ஃபில் பீடி, குத்த பாரே… குண்டூர் நீ’ இன்ட்ரோ பாடல் ‘நான் காஃபி கப்புலோ சுகரு க்யூபு நுவ்வே நுவ்வே’ எனும் ரொமான்ஸ் பாடல், ‘குறிச்சி மாடத்தபெட்டி’ எனும் டான்ஸ் நம்பர் என சிக்ஸர்களைப் பறக்கவிட்டு `மேன் ஆஃப் தி மேட்ச்’ வாங்குகிறார் தமன்.
மனோஜ் பரமஹம்சாவின் கேமரா குண்டூர் மிளகாய் மண்டியின் காரத்தையும் லவ் போர்ஷனில் காதலையும் சரி சமமாகக் கூட்டியிருக்கிறது. ஏ.எஸ்.பிரகாஷின் கலை இயக்கம் சில இடங்களில் நன்றாக இருந்தாலும் பல இடங்களில் செட் உணர்வையே அழுத்தமாகக் கொடுக்கிறது.
நவீன் நூலி அவரால் முடிந்தவரை கதைக்கு ஒத்துழைக்கிறார். இருந்தும் சில விஷயங்கள் கமர்ஷியலுக்காகச் சேர்த்திருக்கிறார்கள். அதை வெட்டியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். ராம் லக்ஷமணின் ஸ்டன்ட் அளவாக இருந்திருக்கலாம். ஹீரோவை காற்றில் நீந்த விட்டிருக்கிறார்கள். 4 இன்னோவா, 3 ரேஞ்ச் ரோவர், 2 மஹிந்திரா தார் ஆகியவற்றை அவ்வப்போது பறக்க செய்து ‘இதி செம ஆக்ஷன் சினிமா. ட்ரஸ்ட் செய்யண்டி’ என்கின்றனர்.
‘குண்டூர் காரம்’ என இவர்கள் கொடுத்த பில்டபிற்கு, படம் பார்க்கும்போது சாப்பிடும் பாப் கார்னோ, சாக்லேட் டோனட்டோ எதுவாக இருந்தாலும் காரமாக இருக்கும் என்ற நினைத்தால், ‘கில்லி’ த்ரிஷா போல காரப்பொறியோ, இல்லை ஸ்பைஸியான ஹைதராபாத் பிரியாணியே சாப்பிட்டுக் கொண்டு பார்த்தாலும் காரமாக இருக்காது போல. அந்தளவுக்குக் காரமே இல்லாமல் இருக்கிறது ‘குண்டூர் காரம்’.
மேக்கிங், மாஸ் என கவனம் செலுத்திய படக்குழு, கன்டன்டிற்கு மெனக்கெட்டிருந்தால் கண்களைத் துடைத்துக்கொண்டும், கைத்தட்டியே சிவந்து போன கைகளுடன் மீண்டும் கைத்தட்டியும் பார்த்திருக்கலாம். ஆனால், இப்போது பாதியில் எழுந்து வெளியே போய் ‘படத்துலதான் காரம் இல்ல. நீங்களாவது காரமா ஏதாவது சாப்பிட கொடுங்க’ என கேட்கும் நிலைமை வந்துவிட்டது. மொத்ததில், ‘குண்டூர் காரம்’ – வெடிகுண்டு காது வெறுங்குண்டு அந்தே !
+ There are no comments
Add yours