‘ஹாக்ஐ’ தொடரின் நிகழ்வுகளுக்குச் சில மாதங்கள் கழித்துத் தொடங்கும் இதில், மாயா லோபஸ், வில்சன் ஃபிஸ்க்கின் கீழ் அடியாளாக இருக்கிறார். ஆனால், அங்கு நடக்கும் ஒரு தவற்றால் அவர் ஓடி ஒளிய வேண்டிய சூழல். முதலில் வேண்டா வெறுப்பாக ஒக்லாஹோமாவில் இருக்கும் தன் சொந்த ஊருக்குத் திரும்புபவர், பின்பு தன்னுடைய அமெரிக்கப் பூர்வகுடி கலாசாரத்தில் ஒன்றி, தன்னுடைய குடும்பத்திடமும் இனக்குழுவுடனும் தன்னை இணைத்துக் கொள்கிறார். விட்ட குறை, தொட்ட குறையாகப் பகை துரத்த, அதைச் சமாளிக்க மாயா என்னும் எக்கோ செய்யும் சாகசங்கள்தான் இதன் கதை.
மாயா லோபஸ் எனப்படும் எக்கோவாக அலக்குவா காக்ஸ். செவித்திறன் சவால் உடையவர், பிராஸ்தெடிக் கால் பொருத்தியவர். எக்கோவின் கதாபாத்திரமும் அத்தகைய சவால் கொண்டது என்பதால் ‘ஹாக்ஐ’ தொடர் வெளியான போதே அலக்குவா சிறப்பான காஸ்டிங் சாய்ஸாகப் பார்க்கப்பட்டார். அதில் எட்டு அடி என்றால் இதில் பதினாறு அடி பாய்வதற்கான வெளியை அவருக்கு அமைத்துக் கொடுத்திருக்கிறது மார்வெல். ஸ்டன்ட் காட்சிகளும் அவரின் செயற்கைக் கால்களை உள்ளடக்கியதாகச் சிறப்பான ஒன்றாக அமைய, அலக்குவா அனைவருக்குமான இன்ஸ்பிரேஷனாக மிரட்டலான நடிப்பை வழங்கியிருக்கிறார். சண்டைக் காட்சிகளுக்கு அவர் கொடுத்திருக்கும் உழைப்பு கற்பனைக்கு அப்பாற்பட்டது. நடிப்பைப் பொருத்தவரைப் பல உணர்வுகளை வெளிக்காட்டும் முகபாவங்களில் மட்டும் சறுக்குகிறார். அவரின் பாத்திரத் தன்மையே அப்படித்தானா, அல்லது அது நடிப்பிலிருக்கும் குறையா என்பதுதான் புலப்படவில்லை.
+ There are no comments
Add yours