தற்போது ரீ-ரிலீஸ் படங்கள்தான் திரையரங்குகளில் வசூலில் மிரட்டிக் கொண்டிருக்கிறது.
இதனைப் பின்பற்றி பல முக்கிய திரையரங்குகள் தொடர்ந்து படங்களை ரீ- ரிலீஸ் செய்து வருகின்றனர். சமீபத்தில் வெளியான ‘வாரணம் ஆயிரம்’, ‘3’, ‘மயக்கம் என்ன’, ‘சிவா மனசுல சக்தி’ ஆகிய திரைப்படங்கள் ரீ-ரிலீஸில் அமோக வரவேற்பைப் பெற்றது. ‘4K’ ஸ்கிரீன், ‘க்யூப்’ என தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்டாலும் நாஸ்டால்ஜியாவாக ரீல் புரொஜெக்டர் மூலம் மார்ச் மாதத்தில் பழைய படங்களை ரீ- ரிலீஸ் செய்ய முடிவெடுத்திருக்கிறது, சென்னை ஜி.கே தேவி கருமாரி திரையரங்கம்.
ரீல் – புரொஜெக்டரில் இன்றைய தேதியில் படங்களை ரிலீஸ் செய்வதில் பல சிக்கல்களும் இருக்கின்றன. ஒலி அமைப்பு தொடங்கி படங்களின் மற்ற தொழில்நுட்பம் என அனைத்தும் மெருகேறிவிட்டது. ஏற்கெனவே முன்னணி தொழில்நுட்பங்களில் படத்தைப் பார்த்து பழகிய பார்வையாளர்களுக்கு இப்படியான பழைய தொழில்நுட்பங்கள் . இது குறித்து முழுமையாகத் தெரிந்துகொள்ள ஜி.கே திரையரங்கத்தின் உரிமையாளர் ரூபனிடம் பேசினோம்.
அவர்,” 2009 ஆம் ஆண்டுக்கு முன்பு வெளியான முக்கியமான திரைப்படங்களின் டிஜிட்டல் பதிவுகள் இல்லை. அதை நாம் மீண்டும் ரிலீஸ் செய்ய வேண்டுமென்றால் பழைய புரொஜெக்டரைப் பயன்படுத்துவதுதான் ஒரே வழி. நாங்களும் பழைய ரீல் புரொஜெக்டரைப் பாதுகாப்பாக வைத்திருந்தோம். அது இப்போது எங்களுக்கு உதவுகிறது. இதற்கு முன்பு ரீ- ரிலீஸ் செய்யப்பட்ட படங்களின் டிஜிட்டல் பதிவை ஏற்கெனவே தயார் செய்து வைத்திருந்தார்கள். சில படங்களுக்கு ரீல் மட்டும்தான் இருக்கிறது. ஒலி தொடர்பான தொழில்நுட்பங்களுக்கு DTS இருக்கிறது.
`காதல் மன்னன்’, `ஆசை’ திரைப்படங்களை ரீல் மூலமாக காட்சிப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறோம். `சத்யா’, `வறுமையின் நிறம் சிவப்பு’ ஆகிய திரைப்படங்களையும் ரீல் மூலமாக வெளியிட முயற்சி செய்து வருகிறேன். ‘காதல் மன்னன்’, ‘ஆசை’ திரைப்படங்களெல்லாம் அஜித் சார் கரியரில் முக்கியமான படங்கள். அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். சமீபத்தில் ரீ – ரிலீஸ் செய்யப்பட்ட வாரணம் ஆயிரம், 3 படங்களை 2K கிட்ஸ் கொண்டாடினார்கள். தற்போது 90 -ஸ் கிட்ஸ் கொண்டாடும் வகையிலான படங்களை ரீ- ரிலீஸ் செய்யத் திட்டமிட்டு வருகிறோம். திரையரங்கத்திலுள்ள இன்றைய தொழில்நுட்பங்களுக்கு மக்கள் பழகிவிட்டதால் ரீல்களில் உருவாக்கப்பட்ட படங்களைப் பார்க்கும்போது இப்போது இருப்பதைவிட வேறுபாடு நிச்சயமாகத் தெரியும். ஆனால், கிளாசிக் தமிழ் திரைப்படங்களை பார்ப்பதற்கு இதுதான் ஒரே வழி.
ரீல்கள் மூலம் வெளியிடவுள்ள படங்களின் டிக்கெட் விலை வெறும் 50 ரூபாய்தான். இதில் விநியோகஸ்தர்கள் குறைவான ஷேர்தான் எடுத்துக் கொள்வர். புதிய படங்களுக்கு இருப்பது போன்ற ஷேர் இதில் இருக்காது. இதுமட்டுமின்றி இப்படி ரீல் மூலமாக ரீ-ரிலீஸ் செய்வது பணத்திற்காக அல்ல இந்தத் துறையின் மீது கொண்ட ஆர்வத்தினால்தான் செய்கிறோம்.
பல தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும் பழைய ரீல்களில் இருக்கக்கூடிய தரம் கிடைக்காது. அதில் கிடைக்கும் கலரும் ஒலியும் ஈர்க்கும் வகையில் இருக்கும். மார்ச் மாதத்தின் வார இறுதிகளில் 2 முதல் 3 திரைப்படங்களை ரீல் புரொஜெக்டரைப் பயன்படுத்தி வெளியிடுகிறோம். இதனை மார்ச் மாதத்தின் முதல் வாரத்திலிருந்து மூன்றாவது வாரம் வரை பின்பற்றுகிறோம்.” எனக் கூறினார்.
+ There are no comments
Add yours